பக்கம் எண் :


இராவண காவியம் 457

   
          46.    மற்று மெத்தனை மன்ன ரைப்புகன்
                     மறவ ரைமட மாதரைச்
                சுற்ற மோடுநட் புற்ற செந்தமிழ்த்
                     தோழர் வாழ்வுதொலை தீயரைக்
                குற்ற மற்றவ ரென்று வாயினாற்
                     கூற வெட்கமுனக் கில்லையோ
                பெற்ற வர்க்கொரு பிள்ளை யோபெம்
                     பேதை யேபகை யல்லையோ.

          47.    குடியி ருந்தநன் மனையி லையகோ
                     கொள்ளி வைத்தரிய கோட்டைகள்
                முடிய நம்மினத் தவரை வீழ்த்திய
                     மோச வஞ்சமன வடவரை
                நெடிய நல்லவ ரென்று கூறிடு்ம்
                     நீயு மொருதமிழ் மருகனோ
                கொடிய ருன்னிலு மொருவ ருண்டுமோ
                     கூறு வாயட கொடியனே.

          48.    உமிழ கத்துநஞ் சுடைய பாம்பினை
                     யொத்த தமிழரறை போகினும்
                அமிழ மாக்கட லின்னு முற்றெழுந்
                     தனைய ழப்பெருகி வருகினும்
                தமிழர் யாவரு மொழிய நானொரு
                     தனிய னாகவுள வரையினும்
                தமிழ கத்தொரு மண்ணு மாரியர்
                     தங்க ளுக்குரிய தாகவோ.

          49.    காட ணாவிய மலையெ லிக்குலங்
                     கல்லு மென்றுநடு நடுங்குமோ
                கோட ணாவிய மரம தூஉமரங்
                     கொத்தி கொத்துமென வஞ்சுமோ
                பாட ணாவினோர் சோம்ப லாம்படு
                     பாவி வரவையெதிர் பார்ப்பரோ
                பீட ணாவுன தறிவி ருந்தபடி
                     பேச நாவுநனி கூசுதே.
-------------------------------------------------------------------------------------------
          47. மருகன் - வழித்தோன்றல், மகன். 48. உமிழ்அகம் - வாய். அறைபோதல் - பகைவரைச் சேறல். அனை - தமிழ்த்தாய். 49. அணாவிய - பொருந்திய. பாடு அணாவினோர் - தொழிலாளர்.