பக்கம் எண் :


46புலவர் குழந்தை

   
     படை உரிமையான பேச்சு, எழுத்துக்குச் சுதந்தரம் இருக்க வேண்டும் என்பதுமே
யாகும்.

     இப்படிச் செய்வதன் வழியாக ஐரோப்பிய மக்கள் பல துறைகளிலும் தங்கள்
சிந்தனையைச் செலுத்தி, சரி, தப்புப் பார்த்துக் கொள்ளவும், அதே சமயத்தில்
பலதிறப்பட்ட வகைகளிலும் தங்கள் இலக்கியங்கள் சிறப்புற்றோங்குவதற்கும் உரிமை
வழங்கியுள்ளார்கள். இதன் காரணமாய்

     ஐரோப்பிய மக்கள் உலகில் ஒரு தனி மதிப்புப் பெற்றுள்ளதும் கண்கூடு.

     சென்னை அரசாங்கம் இராவண காவியத்துக்குத் தடைவிதித்து விட்டதன் மூலம்,
இராவண காவியத்துக்குச் செல்வாக்கும் சிறப்பும் ஏற்படும்படி செய்திருக்கிறார்கள்.
இதுவரை இந்நூலைப் படிக்காதவர்கள்கூட, இனி இரகசியமாகவேனும் படித்துப் பார்க்க
விரும்புவர். அத்துடன் ஓர் இராவண காவியத்துக்குப் பதிலாகப் பல இராவண
காவியங்கள் புதுப்புது வழிகளில் உண்டாக வழி ஏற்படவும் முடியும். முன்னாள் இருந்த
சென்னை அரசாங்கம் பாரதியார் பாட்டுக்குத் தடை விதித்ததன் மூலம் பாரதியார்
பாடல்களை நாட்டுமக்கள் அதிகமான விருப்பத்தோடும் ஆசையோடும் படிக்கலானார்கள்.
அதுபோலவே, முன்பு இந்திய ஆட்சிப் பொறுப்பை நடத்திவந்த பிரிட்டிஷார், மார்க்கீய
நூல்களை வெளிநாடுகளிலிருந்து வராதபடி தடுத்துவிட்டால், பொதுவுடமைக்
கொள்கையை இந்தியாவில் பரவவிடாதபடி தடுத்துவிடலாம் என்றும் கருதினார்கள்.
ஆனால், அவர்கள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாகப்
பொதுவுடைமைக் கொள்கை நாட்டிலே காட்டுத்தீபோல் பரவி வருகிறதையும் நாம்
பார்க்கிறோம். அவர்கள் நினைத்தபடி மார்க்சீய நூல்களைத் தடுக்கவும் முடியாமல்
போயிற்று. சென்னை அரசாங்கம் சென்றகால அனுபவங்களை நினைவு கொள்ளாமல்
இத்தடை விதித்தது, அவர்கள் ஆட்சிக்குக் கெட்ட பெயரைத்தான் கொண்டு வந்து தரும்
என்று நாம் கவலையடைகிறோம். அறிவின்மீது தடை விதிக்கும் சென்னை அரசினரின்
இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. உடனே சென்னை
அரசாங்கம் தவற்றை உணர்ந்து இத்தடை உத்தரவை எடுக்க வேண்டியது அவசரமும்அவசியமுமாகும். அப்படிச் செய்ய அரசாங்கம் மறுக்குமானால் அதன் எண்ணம்
பூர்த்தியாகாமல் போவதோடு, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாகத்தான்
வந்து முடியும் என்று நாம் எச்சரிக்கிறோம்.

                                      - 15-6-48: ‘பிரசண்ட விகடன்’ இதழில்