பக்கம் எண் :


இராவண காவியம் 473

   
          27.   கப்பிய பகைவரைக் கங்குல் போதுமுன்
               தப்பிலா தடுகளஞ் சாய்த்தி லோமெனில்
               ஒப்பியே கொல்படைக் கலங்க ளொன்றையும்
               துப்புறழ் கைகளாற் றொடுகி லோமென்பார்.

          28.   வளைப்படு கையினீர் வாகை சூடியாம்
               ஒளித்தொகை யொடுமனை யுற்றி லோமெனில்
               அளித்தொடர் வெறிப்புன லள்ளற் கண்படு
               களிற்றினத் தடியினிற் காண்டி ரென்பரால்.

          29.   திண்டிற லீர்நறுந் தேனந் தூமொழி
               ஒண்டொடி சினைசிதைத் தொழித்த பாவியைத்
               துண்டுசெய் தீர்ங்குழல் தொட்ட கையினைக்
               கொண்டுவந் தெமக்குநீர் கொடுக்கு வீரென்பார்.

          30.   கயிறதாத் திரித்துமான் கன்றைக் கட்டிடச்
               செயிரறு செம்பொனிற் செய்த பாவையின்
               உயிரினைச் சினைசிதைத் தொழித்த பாவியின்
               மயிரினை யறுத்துமே வாரு மென்பரால்.


          31.   பாட்டியைக் கொன்றுபெண் பழிகொள் பாவியைச்
               சாட்டையா லெங்கள்கை சலிக்கச் சாடியே
               வாட்டடங் கண்ணொடு வடக்க ணோட்டிடக்
               கூட்டினி லடைத்துமே கொணரு மென்பரால்.

          32.   நன்னலஞ் செறிதமிழ் நங்கை மாரொடு
               பன்னலஞ் செறிந்தபொற் பாவை கைசெயத்
               துன்னலர் முடிமணி தொகுத்துக் கொண்டுவந்
               தின்னலம் புரிதிரென் றியம்பு வார்சிலர்.

          33.   கலம்படு முறுப்பினைக் களைந்து நந்தமிழ்க்
               குலம்படு நங்கையைக் கொன்ற வன்மனை
               புலம்பிட மாமுடிப் பொன்கொ ணர்ந்துசெஞ்
               சிலம்புசெய் தணிகுவந் தெளிமி னென்பரால்.

          34.  அரிக்குகை தனையடுத் தளவி லாக்குறு
               நரிக்குலஞ் சூழ்ந்தபோல் நமதி லங்கையைப்
               பொருக்கெனச் சூழ்ந்தவப் புல்லர் தங்களை
               முருக்குவ மிமையென முரணி யார்க்குவர்.
-------------------------------------------------------------------------------------------
          27. துப்பு - வலி. 28. ஒளி - மிகுபுகழ். அளி - வண்டு. அள்ளல் - சேறு. 30. செயிர் - குற்றம். 31. வாள் தடம் கண் - சீதை. 32. கை செய்தல் - அலங்காரஞ் செய்தல். 33. கலம்படும் - அணிகலன் அணியும்.