பக்கம் எண் :


இராவண காவியம் 477

   
         62.    செந்த மிழ்மொழிக் காகவே முன்செருச் செய்து
               வந்த தாரினை யொழிபட நூறியே வாகை
               தந்து கொல்களி றுழக்கியே களத்திடைச் சாய்ந்த
               தந்தை கல்லினைக் காட்டவா ளொருதனித் தமிழ்த்தாய்.

         63.    இன்று போரினுக் கனுப்பவே யாளெனக் கில்லை
               அன்று தாய்மொழிக் காகவவ் வாரியர் தம்மைக்
               கொன்று கொல்களம் பாடிடப் பொருதுமென் கோனும்
               வென்று சென்றன னென்செய்கே னென்னுமோர் மெல்லி.

         64.    ஓகை யோடருந் தும்பையந் தொடைபுனைந் துவந்தே
               ஈகை யோடொளி வாட்கைமுத் தாடியே யினிது
               போகி யேவட வாரிய மொழிபடப் பொருது
               வாகை சூடியே மீள்கென விடுக்குமோர் மடந்தை.

         65.   பெற்ற நாளினும் பெரிதியா னுவந்திடப் பெருகி
               முற்று மாரியப் பகையினை வலங்கெட முருக்கிக்
               கொற்ற முற்றுவா வில்லையேற் கொல்களி றுழக்கி
               மற்ற வற்றொடு வீழ்குவை யென்னுமோர் மறத்தாய்.

         66.    எறிந்த வேலினைக் கண்டுமே விழித்தக ணிமைப்பின்
               புறந்த ருதலிற் பிறிதிலை யாதலாற் புதல்வா
               பிறந்த நாளினும் பெரிதியா னுவந்திடப் பெயர்ந்து
               சிறந்த வீரனாய் வருகவென் பாளொரு சினத்தாய்.

         67.   வாழை நேரடி வாழையாய் மறக்குடி வந்த
               வீழி னீள்குடி தாங்குசெல் வாவுனை மேவார்
               கோழை யென்றிடின் மானம்விட் டேயுயிர் கொண்டு
               வாழ கின்றிலேன் காண்டியென் பாளொரு மறத்தாய்.

         68.    பண்ணைக் கொட்குமன் னாய்நகர் முற்றுமப் பதரை
               வெண்ணெய்க் கட்டிபோல் நிணமுகத் தலையினை வெட்டிக்
               கண்ணைக் குத்தியே யீகுவன் கயிலெனக் கதிர்கொய்
               மொண்ணைக் கத்தியைத் தீட்டுமோ ரிளந்தமிழ் முளையே.
-------------------------------------------------------------------------------------------
         62. தந்தைகல் - தந்தையின் உருவும் பேரும் புகழும் பொறிக்கப் பட்ட நடுகல். 64. ஓகை - மகிழ்ச்சி. ஈகைக்கை, வாட்கை என்க. 68. கொட்கல் - கூட்டல். முளை - மகன்.