பக்கம் எண் :


இராவண காவியம் 481

   
         12.   படையக்கரை சென்று பசும்பழனக்
              கொடைமிக்குயர் கூல மிகுந்துபுனல்
              நடைமிக்கவிர் நாடு கடந்துநடந்
              தடையக்கொடி யாடு மிலங்கையினை.

         13.   சேனைத்திர ளோடவர் சென்றுநறுந்
              தேனைப்புரை செந்தமிழ் தந்துவளர்
              கோனைப்புரை கூட முயர்ந்தபுயல்
              வானைப்புரை மாநகர் கண்டனரே.

         14.   ஏடாணியி னேன்ற தமிழ்க்கொடியொண்
              கோடாருயர் மாட கொடுமுடிமேற்
              கூடார்வரு கின்றனர் கொல்லுமென
              நாடாவியல் நங்கையர் போலியலும்.

         15.   ஒப்பேது மிலாத வுயர்மதில்போல்
              இப்பாரினி லெங்கு மிலாததினால்
              எப்போது மறிந்தில தின்றறிய
              அப்பாவிக ளாயின ராரியரே.

         16.   மண்ணுக்கணி யாகிய மாநகரைக்
              கண்ணுக்கணி யாயவர் கண்டனர்கண்
              டெண்ணுக்கணி யேது மறிந்திலராய்
              உண்ணெக்குணர் வொல்கின ரூனர்களே.

         17.   மின்னோதிகழ் மின்னொளி மேவியசெம்
              பொன்னோவொளிர் பொன்னொடு பன்மணியின்
              முன்னோகதிர் மூத்த வொளித்தொகையோ
              என்னோவிதி லங்கை யிதோவலவோ.

         18.   மலைமேவிய மாமுகில் சூழியபே
              ரலைமேவிய வாரிரு ளோடறியா
              நிலைமேவிய நெஞ்சிரு ளோடுதமிழ்க்
              கலைமேயவி ராவண காவியமே.
-------------------------------------------------------------------------------------------
         12. கூலம் - தவசமும், ஆடுமாடுகளும். நடை - ஒழுக்கம் - நீர்நிறைந் திருத்தல். அவிர்தல் - விளங்குதல். 14. கோடு ஆர் - பக்கம் பொருந்திய. கொடுமுடி - கோபுரம். நாடா - நாடும். 16. எண் - எண்ணம். உள்நெக்கு உணர்வு ஒல்கினர் - நெஞ்சுருகி உணர்வு சுருங்கினர். 17. மணியின் முன் - ஒன்பான் மணியினுமிக்க ஒளியையுடைய ஞாயிறு திங்கள். என்னோ இது - இது என்ன தோற்றம். 18. அலை - கடல். அலைமேவிய - கடல் சூழ்ந்த உலகம். ஆரிருள் - மிக்க இருள். இது சிலேடை (1) தமிழ் - இனிமை. கலை - ஒளி. இராவணம் - விளக்கு. வியம்நா - பெரிய பாதுகாப்புக்கூடம். உலகிருளை யோட்டும் ஒளிவிளக்கின் கூடம் (2) நெஞ்சிருள் ஓடும் தமிழ்க்கலை மேவிய இராவண காவியம்.