பக்கம் எண் :


இராவண காவியம் 485

   
         41.   ஆகை யாலணு காமலவ் வாரியர்
              சாக வேவலி கொண்டனிர் தாக்கியே
              ஓகை வேலை யுயர்த்து மகிழ்வொடு
              வாகை சூடி வருகுவி ரென்னவே.

         42.   சென்றி தோகொடுந் தீய வடவரை
              ஒன்றி லாம லொருங்கு களப்படக்
              கொன்று வாகை புனைந்து குடைநிழல்
              நன்று கூடுவ மென்ன நவையிலான்.

         43.   வளப்ப டக்கதிர் வானுயர் மும்மதில்
              உளப்ப டாம லுரனொடு காப்பதோ
              டளப்ப டைத்தொகை யாரியர் தம்மையோர்
              களப்ப டுத்திப் பொருதிகல் காணுவீர்.

         44.   உளவ ரோடவ ருற்றன ராகையால்
              இளைய ரென்றுகொண் டெள்ளுதல் தீமையாம்
              வளமை கொண்ட மறப்படை யுள்ளரும்
              களமி லாதிகல் காணுதல் கூடுமோ.

         45.   என்ன வேயிறை யோதவவ் வேறனார்
              மன்ன வாவட வாரிய வஞ்சகர்
              இன்னி தோசென் றிகலி யிலங்கையைத்
              துன்னி டாது துறப்பமென் றேகினார்.

         46.   ஏகி மற்றவ ரீரிரு வாயிலும்
              ஆக முற்று மருங்கடி யார்வுறப்
              பாகு செய்து பழந்தமிழ் மள்ளரை
              வாகை சூட வுழிஞை மலைந்தனர்.

         47.   ஊர ணங்கி னுயர்குடி மள்ளர்கள்
              தோர ணங்கள் தொறுந்தொறுந் துன்னலர்
              பேர ணங்கிப் பிணங்கள் பிறங்கிட
              ஏர ணங்கெட வேமங்கொண் டார்த்தனர்.
-------------------------------------------------------------------------------------------
         43. வளம் - வலியும், பல்பொருளும், பொறியும், கருவியும். உளப்படாமல் - உட்புகாமல். அளம் - மிகுதி. 44. இளையர் - வலியற்றவர். 46. கடி - காவல். மலைதல் - சூடுதல். 47. அணங்கு - பெண். தோரணம் - மதில்வாயில். அணங்குதல் - கெடுதல். பிறங்க - கவிய. ஏரணம் கெட - கணக்கின்றி. ஏமம் - காவல்.