பக்கம் எண் :


இராவண காவியம் 489

   
         14.  அஞ்சி யோடுமவ் வாரியர் கால்களைக்
             கஞ்சி காலிற் கவிழ்ந்தெனக் காரமுள்
             கொஞ்சி யேநிலங் கும்பிடச் செய்யவே
             நெஞ்சி லூர்ந்து நெளிவர் புழுவென.

         15.  களைய நின்ற கயவருங் காடடர்
             மிளையை விட்டு வெருவி யகன்றுபோய்
             இளைய வாரி யெனத்திக ழப்புனல்
             வளைய நின்ற கிடங்கை வளைத்தனர்.
 
கிடங்கிடைப் போர்
 
         16.  கூசி லாதுகொல் கோள்வன் முதலைய
             ஏசி லாநீர்க் கிடங்கி னிருதலை
             மாசி லாத மறவ ரெதிரெதிர்
             பாசி போலப் பதிந்து பொருதனர்.

         17.  அக்க றையொடு சென்றிட வக்கரை
             இக்க ரையி லிருந்து முயன்றிட
             அக்க ரையி லருந்தமிழ் மள்ளர்கள்
             புக்கி டாது பொருதுயிர் போக்குவர்.

         18.  பலகை தூக்கிப் படரும் படர்களைப்
             பலகை யாக்கிப் படர்செய வப்பிணப்
             பலகை தூக்கிப் பகுவாய் முதலைகள்
             பலகை யாக்கிப் பதப்படுத் துண்ணுமால்.

         19.  அகழி வாய்ப்பட ராரிய வீரரைப்
             பகழி வாய்ப்படப் பண்ணித் தமிழர்கள்
             இகழி லாத விடங்க ரினியுணின்
             உகழி லாம லுறங்குமென் றுன்னுவர்.
-------------------------------------------------------------------------------------------
         14. காரம் - கூர்மை. 15. இளையவாரி - சிறுகடல். 16. கோள்வல் - விடாப்பிடியுள்ள. ஏசு - குறைவு. 18. பலகை - கிடங்கு மீதிடும் பலகை. பல கைதூக்கி என்றுமாம். படர்தல் - செல்லுதல். படர் மறவர். பலகை ஆக்கி - கிடங்கிடைக் குவித்துப் பலகையாகச் செய்ய. படர் - துன்பம். பிணப்பல கை - பிணத்தினது பல கைகள். பலகை - பிளவு, துண்டு. 19. இடங்கர் - முதலை. உகழ்தல் உலாவல்.