பக்கம் எண் :


490புலவர் குழந்தை

   
மதிலிடைப் போர்
 
         20.   வாய்ப்பு டன்செய் மடையமை யேணியில்
              ஆர்ப்பு டன்பட ராரிய வீரரை
              ஏப்பு ழைக்க ணிருந்து பகழிதூய்
              மீப்ப டாது கிடங்கிடை வீழ்த்துவர்.

         21.   உள்ள மூக்க வுயர்மடை யேணியிற்
              புள்ளெ னப்படர்ந் தேறியே போகையில்
              வெள்ள மீது வெரிநுற வீழவே
              தள்ளி வெட்டியால் வெட்டியே தள்ளுவர்.

         22.   உடும்பு போல வுயர்மதின் மீதிவர்
              இடும்பை காணு மிகன்மிகு மள்ளரைக்
              கடும்பு போல்விழக் கைபெய ரூசியாற்
              குடும்பு போல்விழக் குத்தியே வீ்ழ்த்துவர்.

         23.   பொருக்கென் றேணியி லேறும் பொருநரை
              வெருக்கென் றின்னுயிர் வீட்டியே தள்ளிட
              உருக்கு மீயமுஞ் செம்புநெ யுந்தக
              உருக்கி யோவென வூற்றியே வீழ்த்துவர்.

         24.   அல்லி ருந்த வரும்புன லோடையைப்
              புல்லி வந்து புகுதும் பொருநரை
              இல்லி ருந்த பதணத் திருங்கவண்
              கல்லெ றிந்தணு காது கடத்துவர்.

         25.   விழைவி னோடு மிடைந்திவர் வோரெரி
              மழையீ தென்ன மயங்கிக் கிடங்குறத்
              தழைவி னோடுவெந் நீருந் தழலையும்
              புழையி னாலுடற் பெய்துகீழ்ப் போக்குவர்.

         26.  ஆண்ட கைத்துட னாரெயி லேறுவார்
              பூண்ட வாண்டகை பொய்த்தகழ் வீழ்வுற
              ஆண்ட லையடுப் பாலுடல் கொத்தியும்
              தூண்டி லாலுடல் கீண்டுந் துரத்துவர்.
-------------------------------------------------------------------------------------------
         20. வாய்ப்பு - தகுதி. மடை - கிடங்கின் மீது வைக்க ஏணியோடு இணைத்துச் செய்யப்பட்டுள்ள பலகை. மீபடாது - மேலேறாது. 21. வெரிந் - முதுகு. தள்ளிவெட்டி முதலிய இனிக் கூறப்படும் கருவி - பொறிகளை - இலங்கைப்படலம் 138-40 பாட்டுக்களிற் காண்க. 22. கடும்பு - சும்மாடு. குடு்ம்பு - தென்னை, பனைக் குலை. 24. அல் - இருள். ஓடை - அகழ். இல் இருந்த - வீடு போன்ற. 25. தழைவு - உள்ளக்கிளர்ச்சி மிகுதி. 26. ஆண்டகை - ஆண்மை.