பக்கம் எண் :


492புலவர் குழந்தை

   
        34.   திருந்த வேணியிற் சென்று மதின்முடி
             பொருந்து வாரேப் புழையினர் தள்ளவே
             வருந்தி யேறி வழுக்கி யுயர்மரத்
             திருந்து வீழ்பவ ரென்ன விழுவரே.

        35.   ஆய்க ருவிக ளாற்பத ணத்துளார்
             வாய்கள் தோறு மதின்மிசை யேறுநர்
             சாய்க வென்று தறித்திட வேபனங்
             காய்கள் போலக் கருந்தலை வீழுமே.

        36.   அடுத்து வாயி லணுகுந ரைக்களி
             றெடுத்து வானி லெறிந்து நெடுங்கையிற்
             பிடித்து வீசிப் பிசைந்துபின் மண்மிசைப்
             படுத்த ரைத்துயிர் பாத்துடல் வீசுமால்.

        37.   கதவு டைக்குங் களிறுக ளந்நிலைக்
             கதவு டைக்குங் களிறுக லாக்குவர்
             புதவு நீக்கப் புகும்படர் அந்நிலைப்
             புதவு காக்கும் புதுமர மாக்குவர்.

        38.   எட்பு கவிட மின்றிய வாரியர்
             தட்ப வெப்பந் ததைந்த மனத்தொடு
             கொட்பு றத்திறல் கொண்டு பொருதுமே
             உட்பு கமுடி யாதுள் ளுடைந்தனர்.

        39.   மிளையை விட்டனர் வெங்க ணிடங்கர்வாழ்
             வளைய விட்ட வகழொடு மாமதில்
             அளைய விட்டிலர் மானமொ டாண்மையுங்
             களைய விட்டன ரென்று கலங்கினர்.

        40.   உளம லுத்தவ ருள்ளுடைந் தோடுற
             வளம லுத்த வடவர் படைவலர்
             கொளமி குத்திகல் கொண்டு புதியதோர்
             களமி ழைத்துக் கலந்து பொருதனர்.
-------------------------------------------------------------------------------------------
        36. பாத்து - பிரித்து. 37. களிறுகல் - யானைபோன்ற கல். புதவு - கதவு. 38. தட்ப வெப்பம் - விருப்பும் வெறுப்பும். கொட்புற - கூட்டமாக. 39. அளைய - பொருந்த.