களப் போர் | 41. ஆளு மாளு மடர்த்தன ராளவர் நாளு நாளு நணித்தென நல்லயில் வாளும் வாளும் மடுத்தனர் வாள்பயில் தோளுந் தோளுந் துணிந்தன சென்னியே. 42. வில்லும் வில்லும் மி்கைக்க வளைத்தனர் பல்லும் பல்லும் பறக்கக் கடித்தனர் சொல்லுஞ் சொல்லுஞ் சுடச்சுடச் சொல்லினர் வெல்லும் வெல்லுமென் றெண்ணிடும் வீரரே. 43. வேலும் வேலும் மிகைத்தெதிர் வீசினர் கோலுங் கோலுங் குறிப்பிணி லெய்தனர் தோலுந் தோலுந் தொளைப்பட வேந்தினர் சாலுஞ் சாலுமென் றெண்ணுந் தறுகணர். 44. வெம்பும் வெம்பும் மிடலுடை வீரரெய் அம்பு மம்பு மழன்றெதிர் மண்டிடும் பம்பும் பம்பும் பரிக்குலங் கோடெனுங் கம்புங் கம்புங் கனற்றுங் கரிக்குலம். 45. தேருந் தேருத் திசைதிசை மோதலான் ஊரு வோரு முறுநருஞ் சாய்ந்துகு சோரி சோருந் தொறுந்தொறும் வாய்திறந் தோரி யாவலோ டுண்ணவண் ணாருமே 46. உருளை வீசி யுறுத்தெழு வார்புலிக் குருளை போலக் கொதித்தெழு வார்பகை மருளை நோக்கி மடங்க லெனச்சினந் திருளை நோக்கு மிரவிபோல் நோக்குவர். 47. வாளை வீசி வருத்த வெதிர்வரும் ஆளை வீசி யடிக்குங் களிறுகள் தோளை வீசித் துறையிற் றுணிகளை வேளை வீசி வெளுப்பவர் போலுமே. ------------------------------------------------------------------------------------------ 41. நணித்து - குறுகியது. அயில் - கூர்மை. 43. கோல் - அம்பு. தோல் - கேடயம். சாலும் - தகும். 44. மிடல் - வலி. அழன்று - தீப்பறந்து. கோடு - யானைக்கொம்பு. கம்பு - தடி. கனற்றும் - தீப்பற்றச் செய்யும். 45. ஊருவோர் - பாகர். ஓரி - நரி. 46. குருளை - குட்டி. மருள் - வெறி. 47. வேளை - ஏற்ற காலம். | |
|
|