பக்கம் எண் :


இராவண காவியம் 495

   
        55.   பட்ட வீரர் படாதவ ரென்பது
             திட்ட மாகத் தெரிகில வென்னெனில்
             வெட்டி வீழ்த்த விழும்படைக் கைகளும்
             அட்டை போல வலந்து பொருதன.

        56.   ஏந்து வாட்கை யொருவனை யெய்திடாத்
             தோய்ந்து மேற்புகத் தூவிட வெங்கணை
             போந்தை வெண்மடல் போலவு மாருடன்
             ஊர்ந்து செல்லு முருளையு மொத்தனன்.

        57.   போர ணிந்து பொருதகு தும்பையந்
             தார ணிந்துடல் தானைத் தலைவனைத்
             தார ணிந்து தலைக்கொள வேயொரு
             வீரன் வந்து விலங்கியே மீட்குவன்.

        58.   உரிமை யாளனுள் ளொல்க வுடைபடும்
             அருமை கண்டக லாமலக் கூழையை
             எருமை போல விடைப்படத் தாங்கியே
             பெருமை பெற்றொரு மள்ளன் பிறங்குவான்.

        59.   கைப்ப டைகள் கடும்பகை தாக்கலான்
             பொய்ப்ப டையதாப் போய்வெறுங் கையராய்
             எய்ப்பி னில்வைப் பிலாமையி னாற்சிலர்
             மெய்ப்ப டைகொடு வென்றி பெறுவரே.

        60.   குளிறு மாமுகி லென்னக் குமுறியே
             வெளிறு கோட்டின் விலங்கி யெதிர்வரும்
             களிறு கண்டு கடுஞ்சின மள்ளனோர்
             ஒளிறு வாளினை யோச்சி நகைக்குமே.

        61.   கலங்க மேல்வரு காய்சின யானையை
             விலங்கி யஃதொடு வீழ்ந்த வொருவனை
             வலங்கொ டேபகை வாட்கை மறவர்கள்
             அலங்கல் சூட்டித் திரண்டுநின் றாடுவர்.
-------------------------------------------------------------------------------------------
        55. அலந்து - சுழன்று, அசைந்து. 56. எய்திடா - அணுக முடியாமையால். போந்தை மடல் - பனங்கருக்கோலை. ஆர் - வண்டிச்சக்கர ஆரக்கால். உடலிற் றைத்த அம்புகளால் நிலந்தோயாது இருந்தான். 57. தார் - தூசிப்படை. அணிந்து தலைக்கொள - சூழ்ந்து வளைக்க. விலங்கி - வென்று. 58. உரிமையாளன் - படைத்தலைவன். உள்ஒல்க - மனமுடைய. கூழை - பின்னணிப் படை. 59. எய்ப்பினில் வைப்பு - உதவிக்காக வைத்திருப்பது. மெய்ப்படை - உடல்வலி. 60. குளிறுதல் - ஒலித்தல். வெளிறு - வெண்மை.