பக்கம் எண் :


இராவண காவியம் 499

   
        7.    செந்நி லத்துருள் செந்தலை சூடிய
             பொன்னி னத்துப் பொதிந்த முடிமணி
             மின்ன வானின் விளங்கிடு மீனினம்
             இ்ன்ன லுற்றிமை யாம லினைந்தன.

        8.    ஓங்கி யேவு மொருவன் சுடுகணை
             தாங்கி லாது தசரதன் மைந்தனும்
             ஈங்கு நிற்க வினியிய லாதெனப்
             பாங்கு நிற்பவ ரோடு பகர்ந்துமே.

        9.    அறிந்து சேயவ னாற்றலை முன்கொடு
             முறிந்து சென்ற முதுகரைப் போலவே
             உறந்து தம்பியின் னோட வகன்றவன்
             பறந்து சென்றனன் பாசறை யெய்தினான்.

        10.   ஆங்கு நின்றனு மன்முத லாயரை
             ஓங்கி யோங்கி யுதைத்துத் துரத்தியே
             நீங்கி வெங்களம் நீள்முடிக் கோயில்புக்
             கோங்கு தந்தைபா லுற்ற துரைத்தனன்.


        11.   தந்தை கேட்டுத் தழுவித் தழுவியென்
             மைந்த வுன்னை மகனெனப் பெற்றவெற்
             கெந்த நாளி லெதுகுறை யீதென
             வந்த துண்டோ வெனவுள் மகிழ்ந்தனன்.

        12.   வென்றி வீரன் விடைகொடு தந்தைபாற்
             குன்று காணுங் கொடிமணிக் கோயிலைச்
             சென்று கூடினன் சென்ற வடபுலர்
             என்று மில்லா விரும்பட ரெய்தினர்.
 
அறுசீர் விருத்தம்
 
        13.   பாடியை யடைந்தி ராமன் பாவியேன் கெட்டே னெம்பி
             கோடிநாட் பழகி னாலுங் கொடிதவ ழிலங்கை மைந்தன்
             ஆடிய லேவக் கல்வி யறிந்திட முடியு மோதான்
             பீடணற் குறைத்த மாற்றம் பிழைத்திடும் போலு மன்றோ.

        14.   அன்றவன் சொன்ன வாறே யருந்தமி ழிலங்கை வேந்தன்
             முன்றிலை யடைந்தே மென்னில் மொய்குழல் தன்னைக் கூடி
             இன்றியாம் பட்ட துன்ப மின்றியே யயோத்தி தன்னைச்
             சென்றடைந் திருப்பே மன்றோ சிறுமதி யாற்கெட் டேனே.
------------------------------------------------------------------------------------------
        9. முதுகர் - தோற்றவர். உறந்து - விரைந்து. 13. ஆடுஇயல் - வெல்லும். ஏவக்கல்வி - விற்றொழில். 14. அவன் - அனுமன்.