கடைகளுக்கு அதிகாரிகளை அனுப்பி, ‘இத்துணைச் சுவையான கரும்பை விற்பது குற்றமய்யா! இதனைப் பறிமுதல் செய்யவேண்டும் என்பது அரசினர் ஆணை’ எனச் சொல்லி, அக்கரும்புக் குவியலைப் பறிமுதல் செய்துவரச் செய்திருக்கின்றனர். 2-6-48இல் உத்தரவு போட்டு, 9-6-48இல் அக்கரும்பு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. கரும்பு என்றால் சாதாரணக் கரும்பு அல்ல அது. கிடைத்தற்கு அரியது; ஒவ்வொரு கணுவிலும் ஒரு கடல் இன்பம் செறிந்துள்ள பெற்றி வாய்ந்தது; தேனில் ஊறி எழும் இன்சுவை, தென்றலில் தவழ்ந்துவரும் ஆனந்தம், யாழில் தெறிக்கும் நல்லிசை, செந்தமிழில் ஒளிவீசும் கருத்துச் செதில்கள், இவ்வளவையும் கூட்டி எடுத்து வடித்து இறக்கிய சுவைமிகு பொருள் போன்றது அந்தக் கரும்பின் சாறு; அந்தக் கரும்புக்கு நாட்டிலே வழங்கும் பெயர் இராவண காவியம் என்பது; தமிழ் மக்கள் உள்ளத்திலே குடியேறிவிட்ட பெயர் திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னம் என்பது. உண்மையைச் சொல்வதானாலோ அது வருங்காலத் திராவிடத்தின் நுழைவு வாயில். அதைத்தான் சென்னை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. இராவண காவியம் தமிழர் பண்பாட்டின் விளக்கம்; ஆரியச் சூழ்ச்சி அன்றோர் நாள் தமிழ் வீரத்தைச் சாய்த்த கொடுமையைச் சுவைபடக் கூறும் எழில்மிகு இலக்கியம்; அற்புதமான எண்ணங்கள், அழகான சொல்லோவியங்கள், உள்ளத்தைத் தொட்டிழுக்கும் உன்னதமான கதைப்போக்கு. இவை மூன்றையும் தமி்ழ்த்தேனிலே குழைத்துத் தந்திருக்கிறார் புலவர் குழந்தை. அந்தக் காவியத்தைப் பிரித்துப் படித்தால், ஒருபால் வீரம் ததும்பும், மற்றோர்பால் அழகு தவழும், ஓரிடத்தில் இன்பம் கொஞ்சும், மற்றோரிடத்தில் சொல்லடுக்கு வந்து நின்று இன்பநடம் புரியும்; ஒரு புறத்தில் ஆரியர் கொடுமை அம்பலம் ஏறும்; மறுபுறத்தில் திராவிடத்தின் எழில் தன் நலம் காட்டும். வீரச்சுவை, இன்பச்சுவை, கருத்துச்சுவை என்றும் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு நூல் முழுதும் ஓடியோடி விளையாடும். உண்மையிலேயே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் இலக்கியம் இராவண காவியம். அது இணையற்ற தமி்ழ் இலக்கியம் என்பதுகூட அல்ல முக்கியம். அந்தப் பெரும்புலவன் கம்பனால் தமிழர் பண்பாட்டிற்கு உண்டாக்கப்பட்ட அழியாத பழி துடைக்கப்பட்டுள்ளது அக்காவியத்தால். ஆம், அதுதான் அதன் தனிச்சிறப்பு! கம்பன், தன் முன்னோனை, தென்னவனை, சொந்த இனத்தோனை, இனத் | |
|
|