பக்கம் எண் :


இராவண காவியம் 507

   
         21. இறையொடு முரணி வந்த விரண்டகன் றன்னை யேற்றல்
            முறைமையோ நால்வ ரோடு முன்பிறந் தவனீ யன்றோ
            இறைமையை யறியா யோவுன் னெம்பிக்கு மென்றம் பிக்கும்
            நிறைகுண வேறு பாட்டை நினைத்துப்பார்த் திலையோ வென்ன.

         22. வேள்வியை யிகழ்ந்தவ் வேள்வி விரும்பியே செய்யு மான்ற
            கேள்வியு மருளுஞ் சால்புங் கிளர்தவ வலியும் வாய்ந்து
            நாள்வளர்த் துலகை யோம்பி நற்றவம் புரிமே லோரைத்
            தோள்வலி யதனால் வாட்டித் துரத்தியே கொடுமை செய்யும்.

         23. பாவிகா ளினிமே லிந்தப் பாரினி லில்லா துங்கள்
            ஆவியை யழித்துப் போக்கி யறத்தைக்காத் திடவே யீங்கு
            மேவினே னெனவில் வாங்கி வெங்கணை தூவி யார்த்தான்
            பாவலர் புகழ்நல் லோனும் பகழிமா மழைபெய் தானே.

         24. வெற்றிதோல் விகளில் லாது வீரர்க ளிரண்டு பேரும்
            கொற்றமார் கொள்வா ரென்னக் கூறிடு மறிவு வீழ
            எற்றினில் முடியு மோவென் றேங்கவாங் குள்ளோ ரெல்லாம்
            சற்றுமே சலிப்பி லாது தருக்கியே பொருதா ரம்மா.

         25. எண்ணிடப் படாம லேவ மிடையறா தியலப் பார்ப்போர்
            கண்ணிடைப் படாது காலிற் கதிரொளிப் பிழம்பு போல
            மண்ணிடைப் படாது வான மருவியே வெருவி நீங்கிப்
            புண்ணிடப் படாது நீக்கிப் பொருதனர் பொருவி லாதார்.

         26. மாகெடுத் துடலை யோம்பி வருதலை வெறுத்த லன்றித்
            தாகெடுத் துறவு பூண்டு தமிழ்கொடுத் துதவி னோரை
            வேகடுத் தழலும் பொன்போல் வெஞ்சின மூட்டி நம்மை
            ஆகெடுத் தோமே யென்றாங் கஞ்சினர் முனிவ ரெல்லாம்.

         27. வன்கொலை யொருநான் காக வஞ்சக னற்றம் பார்த்துத்
            தென்கலை யெழுதுங் கையைச் செவ்விதழ் பிடிக்குங் கையைத்
            தின்கலை யறுப்பான் போலச் செலவையு மறுத்துப் பின்னர்த்
            தன்கொலை யம்பொன் றேவித் தலையையு மறுத்தா னையோ.
-------------------------------------------------------------------------------------------
         25. கால் - காற்று. பிழம்பு - வடிவம். புண் - உடல். 26. மா - விலங்கு. தா - பகை. தமிழ் - இனிய உணவு. 27. அற்றம் - ஏற்றநேரம். தென்கலை - தமிழ். இதழ் - ஏடு. தின்கலை - தின்னும் மான். செலவு - கால்கள்.