36. மண்ணா மணியே மறஞ்செறிந்த கொல்லேறே நண்ணார் திரண்டு நலியத் துணையின்றி அண்ணாவோ வென்றே யழைத்தாயோ வாணழகா பண்ணா வுதவிப் படுபாவி யானேனே. 37. மலையகழ்ந்து நீண்டொழியா வண்மைதழீஇத் தூயதமிழ்க் கலைமலிந்த கையறுத்துக் காலறுத்துக் கண்ணேபின் தலையரிந்து நீமடியத் தம்பியோ வுன்றனைவன் கொலைபுரிந்து கொன்றானைக் கொன்றுபழி வாங்கேனோ. 38. ஒன்னா ருடன்சேர்ந் துயிர்குடிக்கக் காத்திருப்போன் முன்னே பிறந்து முனைச்சென்ற றெனக்காவென் முன்னே யிறந்து முதிராப் புகழ்பூண்ட பின்னோயுன் முன்னே பிறந்து மிறந்திலனே. 39. வண்ணத் தமைந்த மலர்ப்பஞ் சணைதுயிலுங் கண்ணுக் கடங்காக் கதிர்சூழுஞ் செம்மேனி புண்ணுக் கெழுகுருதி புலர்ந்து பொடியாடி மண்ணிற் புரண்டு மழுங்கி யழிந்ததுவோ. 40. எப்போது காண்பே னெனும்போ திகன்மறவர் செப்பாது சென்றநடுச் செல்வன் பருவுடலைக் கைப்போது தாங்கிவந்து கண்முன் நிலங்கிடத்தத் தொப்பென்று வீழ்ந்து துணையே யெனவிறையும். 41. வாட்டடங் கைகளால் வாரி யெடுத்தணைத்தே ஓட்டை மனமுருக வோவென்று கூப்பீடக் கேட்டங்கு கூடிக் கிளையெல்லாங் கோவென்று போட்டெங்கள் வாயிடைமண் போனாயோ வென்றழுதார். 42. தானைத் தலைவர் தலைவன் றனைத்தேற்றித் தேனைப் பழித்த தமிழ்ச் செல்வனுடல் நெய்யிட்டு யானைப் படையாள ராளுங் களம்புக்கே ஏனைப் படையோ டெதிர்த்துப் பொருதனரே. 43. அன்னவர்தம் முன்ன ரனுமன் முதலானோர் துன்னிப் பொருதழித்தார் தோலா வதிகாயன் தன்னைச் சிலைராமன் றம்பி யெதிர்ந்தவர்கள் இன்னுற் றயர்வுற் றிருக்கையிலோ ராரியனும். ------------------------------------------------------------------------------------------- 39. புண்உக்கு - புண்ணில் ஊறி. பொடி - புழுதி. 43. இன்னுற்று - துன்புற்று. | |
|
|