23. எயிறொ லிப்ப ரிளமதி முத்துவர் வயிற லைக்குவர் மாரடித் துந்துவர் மயிர விழ்க்குவர் வாயடித் தேங்குவர் உயிர டக்குவ ரோவென் றலறுவர். 24. ஏங்கு வார்விழு வாரெழுந் தேந்தலைத் தாங்கு வால்செழுந் தாமரைக் கைகளால் ஓங்கி யோங்கி யறைந்தறைந் தொண்மதி வீங்கு வாரழு வாருளம் வெம்புவார். 25. ஓவென் றூமரி னுள்ளுடைந் தூனுக ஏவொன் றுள்ளுற வேறிய மஞ்ஞைபோல் ஆவென் றேங்கிவண் டார்குழ லென்னிளங் கோவென் றோடிப்போய்க் குப்புற வீழ்ந்தனள். 26. விழுந்தெ ழுந்து விழுந்தெழுந் தேவிழுந் தெழுந்த விம்முறை யெண்ணிய வாகவே பொழிந்த வுண்கட் புனல்முழுக் காட்டியே குழைந்த செந்தூள் குழைத்துடல் பூசினாள். 27. தத்து வாள்நிலந் தாறுமா றாகவே கத்து வாளையை யோவெனக் கைகொடு மொத்து வாளுடல் மூரவந் தேனெனப் பித்தி போலப் பிதற்றிப் புலம்புவாள். 28. தலையெ டுத்தே யுடலொடு சார்த்துவாள் சிலையெ டுத்துவந் தேகையிற் சேர்த்துவாள் மலைய டுத்தகை வாளுறத் தெவ்வரைத் தொலைய வெட்டெனத் தூக்கியே வெட்டுவாள். 29. கையை முத்திக் கலைமதி முத்திமா மெய்யை முத்தி விழிமுத்தித் தன்னுடல் நைய மொத்தி நடைமுத்தி வாய்திறந் தையை யோவென் றரற்றுவா ளின்னணம். ------------------------------------------------------------------------------------------- 23. எயிறு - பல். உந்துதல் - மேல்விழுந்து முன்செல்லுதல். 25. ஏ - அம்பு. மஞ்ஞை - மயில். 26. செந்தூள் - செஞ்சந்தனப்பொடி. குருதி தோய்ந்து வறண்ட உடலிற் கண்ணீர் படவே அது கரையக் கையால் தடவினாள். | |
|
|