கொச்சகம் | 30. கண்ணே மணியேயென் கண்மணியிற் பூம்பாவாய் மண்ணா மணியே மணியொளிருஞ் சேயொளியே எண்ணேயவ் வெண்ணி வெழுகின்ற நல்லுணர்வே அண்ணா வலங்கோல மாய்க்கிடக்கக் கண்டேனே. 31. பண்ணொத் துயர்ந்ததமிழ்ப் பாட்டின் பெரும்பயனே உண்ணத் தெவிட்டா வுடல்வளர்க்குஞ் செந்தேனே வண்ணத் தருங்கலமே வாடா மணமலரே எண்ணத் தொலையா விடர்க்கடலுள் வீழ்த்தினையே. 32. அருளொழுகு கண்ணு மவிர்மதியொவ் வாமுகமும் தருமலர்நீள் கையுந் தமிழ்பயிலுஞ் செவ்வாயும் மருவளருஞ் செந்தா மரைபுரைசெம் மேனியுமின் றிருள்படிந்து செஞ்சேற் றிடைபுரண்டு மாழ்கினவே. 33. கேள்வாய்ச்சொற் றட்டாக் கெழுதகையே யப்பாவுன் ஆள்வீச்சைப் பேச்சை யரும்பகழி வேல்வீச்சை வாள்வீச்சைக் கண்டு மகிழாம லாரியருன் நாள்வீச்சைக் கண்டு நலனழியச் செய்தனரே. | பிள்ளைப் பருவம் பத்து | 34. ஆழ்கடலி னாவதெலா மாய்ந்த தமிழ்ப்பெரியார் வீழ்க பகைப்பிணிமேல் மேல்வளர்க வன்புநலம் சூழ்க திருவுளத்துச் சூழ்ந்தனவெல் லாஞ்சேயோன் வாழ்க வெனமுன்னாள் வாழ்த்தியசொற் பொய்த்ததுவோ. 35. மங்கா மதிபோல் மலர்முகத்தை யண்ணாந்து முங்கா விதழ்விரித்து மொய்விழிமிப் பல்காட்டித் தங்கா வுவமப்போங்கச் சதங்கைக்கால் கைகாட்டிச் செங்கீரை யாடிச் சிரிக்கயான் காண்பேனோ. 36. பெருங்கண்ணா ரீப்போற் பெயராது சூழ்நிற்பக் கருங்கை மறவர் களத்துப் பகைகொண்டார் முருங்கவடித் தோட்டிடுநின் முன்னோர் புகழ்பாடி அருங்கண் வளர்கெனத்தா லாட்டி மகிழ்வோனோ. ------------------------------------------------------------------------------------------- 33. நாள்வீச்சு - சாவு, முடிவு. 35. முங்குதல் - அமிழ்தல். செங்கீரை - இளஞ்சொல். 36. பெருங்கண்ணார் - தோழியர். முருங்க - அழிய. | |
|
|