பக்கம் எண் :


520புலவர் குழந்தை

   
        37.  நெஞ்சி லுவப்போங்க நீள்கவலை யாழ்ந்தொழிய
            வஞ்சியென் கண்கள் மலர மலர்க்கையால்
            அஞ்சு விரலு மணிகொள்ள வேகுறிப்பாற்
            கொஞ்சிநீ சப்பாணி கொட்டநான் காண்பேனோ.

        38.  வேய்முத்தஞ் செந்நெல் விளைமுத்தம் வெண்சங்கத்
            தாய்முத்தந் தண்கார் தருமுத்தம் பூங்கமுகச்
            சேய்முத்தம் வேண்டேனென் செல்வா தமிழ்பயில்செவ்
            வாய்முத்தந் தந்து மகிழ்விக்க மாட்டாயோ.

        39.  ஓகை யொடுமறவ ருற்றுடலுஞ் செங்களத்துக்
            காகங் கழுகு களித்துண்ணக் கைசெய்வான்
            பாகுபடும் பாவைப் படைவெட்டி வாளேந்தி
            வாகை புனைந்து வரக்கண் டுவப்பேனோ.

        40.  வெம்பிடா தீங்கு விளையாட நீவந்தால்
            தும்பிலீ யாடித் துடைப்பே னுடற்களங்கம்
            நம்புநீ யென்று நவின்றுசிறு கைகாட்டி
            அம்புலீ வாவென் றழைத்துவக்கக் காண்பேனோ.

        41.  துறைபட்ட செந்தமிழ்வாய்த் தோழ ருடன்கூடி
            நிறைபட்ட பொற்சதங்கை நின்றொலிப்ப நில்லாது
            மறைகெட்ட தெவ்வீர் முதுகிட்டோடீரென்று
            பறைகொட்டி நீயாடப் பார்த்துவக்க மாட்டேனோ.

        42.  பெற்றி யிவர்ந்தேறிச் சில்லோதிக் கிண்கிணியார்
            முற்றி லிடைமுகத்தை மூடி முணுமுணுப்பக்
            கொற்றச் சிறுவருடன் கூடிக் குறுங்காலாற்
            சிற்றில் சிதைத்துச் செருக்கிவரக் காண்பேனோ.

        43.  கடையுண்ட செச்சை கலகலப்பக் கால்பெயர்த்துத்
            தொடைவண்டு பாடத் துணைவர் புடைசூழப்
            படையுண்ட வுண்கண்ணார் பார்த்துவக்க வேதெருவில்
            நடைவண்டி யோட்டிவர நான்கண் டுவப்பேனோ.
-------------------------------------------------------------------------------------------
        37. சப்பாணி - கைதட்டுதல். 38. வேய் - மூங்கில். சங்காகிய தாய். சேயாகிய முத்தம். 39. கைசெய்தல் - பழகுதல். பாகுபடும் - பலவகைப்படும். 40. அம்புலீ - சந்திரன். 42. நெற்றி - திண்ணை. சில் - குளிர்ந்த. ஓதி - கூந்தல். கிண்கிணி - சதங்கை. முற்றில் - சிறுமுறம். சிற்றில் - மணல் வீடு. 43. செச்சை - சதங்கை. தொடை - மாலை, படை - வாள், வேல்.