பக்கம் எண் :


524புலவர் குழந்தை

   
அறுசீர் விருத்தம்
       58. இன்னன வகையிற் றாயு மிரங்கியே புலம்பிச் சோரப்
          பின்னரு மிருக்கை விட்டுப் பெயர்ந்தெழுந் தருகி லோடிச்
          சென்னியை யணைத்து நோக்கிச் செம்முகந் திருத்தி மன்னர்
          மன்னவ னீயே யென்பான் மழையினீர் வழங்குங் கண்ணான்.

       59. அம்மையப் பனைநே ரன்பு மாருயிர்க் கருளு மான்ற
          செம்மையு மறிவுங் குன்றாத் திறமையுஞ் சால்பும் வாய்ந்த
          தம்மைநேர் தாமே யான தமிழர்கள் வந்து நாளை
          எம்மர செங்கே யென்றா லென்னயான் சொல்வே னப்பா.

       60. மண்ணிய வுருகு செம்பொன் மணிமுடி சிறப்பச் சூடிக்
          கண்ணிய முடனே கண்டு களிக்குவே மெனவே பாவி
          எண்ணியே யெதிர்வு நோக்கி யிருந்தவவ் வெண்ணந் தன்னில்
          மண்ணையும் போட்டு மாண்டு மடிந்தையோ மகனே யந்தோ.

       61. ஒப்பருந் தலைமை தாங்கி யுடன்றொரு தனிய னாகத்
          தப்பரும் பொய்கை போலத் தயங்கிய களங்கை கொண்டு
          கப்பிய பகைவர் சூழ்ந்து கடுங்கணை தூவக் கைசோர்ந்
          தப்பனே துணைமை தாவென் றழைத்துநொந் தாயோ மைந்தா.

       62. இணையிலா தின்னார் தம்மை எதிர்ந்துமே களங்கை கொண்டு
          கணையொடு வாளும் நாளுங் கதிர்வடி வேலுந் தீரப்
          புணையிலா துவரி நாப்பண் போதுறு மொருவன் போலத்
          துணையிலா தப்பா வென்று துடிதுடித் தழைத்திட் டாயோ.

       63. எல்லிமேற் கேகு முன்னே யிரும்பகைக் கடலை மாந்தி
          வல்லிதின் வாகை சூடி வந்தன னெந்தா யென்று
          சொல்லிய சொல்லோ யாமுன் சுடுதொழி லுடைய பாவி
          கொல்லவே பகைவர்க் குன்னைக் கூட்டியே கொடுத்தே னப்பா.

       64. தொன்றுபாட் டியையு மொன்றாத் தோன்றிய தங்கை தன்னோ
          டன்றுவேற் கரனை மள்ள ரளப்பரி யாரை நேற்றோ
          டின்றுபின் னோடு தானைத் தலைவரை யினத்தை யெந்தாய்
          கொன்றுனைத் தமிழ ராண்மைக் குலத்தினை யழித்திட் டேனே.
-------------------------------------------------------------------------------------------
       60. மண்ணிய - கழுவிய. 61. தயங்குதல் - விளங்குதல். கப்பிய - நிறைந்த. 62. உவரி - கடல். நாப்பண் - நடுவே.