பக்கம் எண் :


இராவண காவியம் 525

   
       65. அப்பனே யுன்னைக் கொன்ற வாரியப் பகைவர் தம்மை
          இப்பவே கொன்று மீள்வே னில்லையேற் களத்தில் வீழ்வேன்
          தப்பிதம் பொறுப்பா யென்று சடக்கென வெழுந்தான் கண்ட
          கப்பிய படைவ லாளர் கடுஞ்சினங் கொள்ளே லைய.

       66. சென்றியாம் விரைவி லந்தத் தீயரை யழித்து வாரோம்
          என்றவர் புகல மன்ன னில்லைநீர் சேனை யோடு
          சென்றொரு முகமா யந்தத் தீயரை வளைத்துக் கொல்லும்
          இன்றெனில் வருகின் றேனா னெனவவர் வணங்கிப் போனார்.

       67. போய்ப்படை தம்மோ டன்னார் பொருதனர் போய பின்னர்
          வாய்ப்புடை மகனை நெய்யில் வளர்த்தியே மன்னர் மன்னன்
          காய்ப்புட னெழுந்து சென்று கதிர்மணித் தேரி லேறித்
          தீப்படை வெருவி யோடச் செருக்களம் புகுந்தா னம்மா.

       68. மொழிப்படி யிரண்டி லொன்று முடிந்திடு மின்றோ டென்று
          மழைப்படு முரச மார்ப்ப வளைக்குலஞ் சரிதா னென்ன
          இழைப்படு பறைகள் ஆமா மினித்தடை யிலைகா ணென்னக்
          கழைப்படு குழலுஞ் சேர்ந்து கடலென முழங்கிற் றம்மா.
 
13. இறைவீழ் படலம்
 
கலி விருத்தம்
 
       1. தாவி லாத்தமிழ்த் தானைத் தலைவர்கள்
         காவ லன்வரு முன்னங் களத்திடை
         ஓவி லாவட வூனரை வீழ்த்தியே
         நாவ லோங்கிட நல்லமர் செய்தனர்.

       2. அன்ன ராக வயோத்தி யிராமனும்
         துன்னி வெங்கணை தூவிட வேதமிழ்
         மன்ன ரேன்று வலங்கொடு நின்றனர்
         அன்ன காலை யருந்தமிழ்ச் செல்வனும்.

       3. முரச மார்ப்ப முழங்கிட வெள்வளை
         புரிசை யானையும் பொன்மணித் தேர்களும்
         கரிசை யற்ற கடும்பரி மாக்களும்
         வரிசை யாத்தமிழ் மள்ளர் தொகுத்துற.
-------------------------------------------------------------------------------------------
       68. கழை - மூங்கில், இனிமை. 1. நாவல் - வெற்றி முழக்கம். 2. மன்னர் - சேனைத்தலைவர். ஏன்று - எதிர்நின்று. 3. புரிசை - கழுத்திடு கயிறு. கரிசை - அளவு.