பக்கம் எண் :


இராவண காவியம் 527

   
        12.   கால றுந்தன கைக ளறுந்தன
             வால றுந்தன மண்டை யுடைந்தன
             தோல றுந்தன சோரி சொரிந்தன
             ஏல றுந்த விருபடை வெள்ளமே.

        13.   கழுகுங் காகமுங் காவண மிட்டன
             ஒழுகு செம்புன லோரி யருந்தின
             முழகு சேற்றிடை மூழ்கும் பிணங்களை
             நழுகு றாதுசெந் நாயிழுந் துண்டன.

        14.   தைபொ ழிந்த தமிழர் தலைமகன்
             கைபொ ழிந்த கடுங்கணை மாரியால்
             மெய்பொ ழிந்த விறலுடை யாரியர்
             பொய்பொ ழிந்த புனைகதை யொத்தனர்.

        15.   சோரி வாரியிற் றுள்ளுவ ரோர்சிலர்
             பாரின் மீது படுக்குவ ரோர்சிலர்
             ஓரி போற்சில ரோடிட வேவட
             வீர ரின்றி வெறுங்களம் பட்டதே.

        16.   கண்டி ராமன் கனன்று விரைந்தெதிர்
             கொண்டு சென்றிரு கோளரி போலவி
             ரண்டு பேரு நவின்றுமே வஞ்சினம்
             மண்டி யேவம் வழங்கி மலைந்தனர்.

        17.   ஏவ மாரி யிருவரும் பெய்யவவ்
             வேவ மாரி யிருநிலந் தோய்கிலா
             தேவ மாரி யிவறுதல் போலழி
             யேவ மாரி யிணையறி கில்லவே.

        18.   இன்ன காலை யிலக்குவ னேமுதல்
             அன்னர் யாரு மருந்தமிழ் மன்னனைத்
             துன்னி வெஞ்சுடர் சூழ்பரி வேடமே
             என்ன வெங்கணை யேவினர் பாவிகள்.
-------------------------------------------------------------------------------------------
        12. ஏலறுந்த - ஒப்பற்ற. 13. காவணம் - பந்தல். ஓரி - நரி. முழுகுதல் - மிகுதல். 14. தை - அழகு. மாரி மெய் பொழிந்த. 16. கோளரி - சிங்கம். மண்டி - மிக. 17. மாரி ஏவ இவறுதல் போல - முகில் பெய்யாமை போல. 18. பரிவேடம் - சூரியனைச் சூழும் வட்டம்.