19. துன்றி யேவுஞ் சுடுகணை மாரியைப் பொன்ற வீழ்த்திப் பொரவொரு தேரினிற் சென்றி ராமனுஞ் செய்யதேர்ப் பாகனைக் கொன்று வீழ்த்தினன் கோமகன் தம்பியும். 20. படுஞ்சி னத்த பரிகளைக் கொல்லவே கடுஞ்சி னத்தொடு கன்றரி யேறுபோற் கொடிஞ்சி நின்று குதித்துக் கொடியன்மேல் நெடுங்கை வாளை நிறம்பட வோங்கினான். 21. கொடிய பாவியைக் கான்மென அந்தவாள் வடவ னெம்பியும் வந்தவன் முன்னுறக் கடிதி னேவிடக் கண்டவி ராவணன் படிறற் காத்தவப் பாவிமே லேவினான். 22. நிறம்பி ளந்து நிலத்தில் விழுந்தனன் புறம்பு நின்ற புலைமகன் மாதலி அறம்பி றழ்ந்தவில் லாளியை யண்மியே குறும்ப ரம்பனோர் கூர்ங்கணை தந்துமே. 23. நம்பி கேட்டருள் நல்லதிவ் வேளையே எம்பி மீதுவா ளேவிடு முன்னரே தும்பி யந்தொடைத் தூமணி மாமுடி வெம்பி யேநிலம் வீழ்ந்திடச் செய்கென. 24. பாவி நன்றெனக் கொண்டப் பகழியை ஏவு முன்னர்வா ளேவித் திரும்புமுன் ஏவி னான திருந்தமி ழோரெலாம் ஓவெ னாவழ ஒண்முடி கொய்ததே. 25. குடைநி ழற்றக் கொழும்பொன் னணைமிசை நெடிதி ருந்து நிலத்தமி ழோர்க்கரண் உடைய தாகியென் றுங்கவி ழாமுடி வடவ னம்பினால் மண்மிசை வீழ்ந்ததே. ------------------------------------------------------------------------------------------- 19. தம்பி - பீடணன். 20. கொடிஞ்சி - தேர்த் தட்டு, நிறம் - மார்பு. 21. ஏவிட - அம்பெய்ய. படிறன் - பீடணன். 22. குறும்பர் அம்பன் - குறும்பர் கைபட்ட அம்பு போன்றவன். குறும்பன் - கெட்டவன். 24. பகழி ஏவுமுன் வாளேவினான்; வாள் ஏவித் திரும்பு முன் பகழி ஏவினான் என்க. | |
|
|