26. கொடிய னம்பினாற் கோமகன் றன்முடி கடமை மேய கனித்தமிழ் மக்களின் உடைமை யாய வுரிமைகள் போல்விழ அடிமை போல வவிழ்ந்தது சோரியே. 27. திருந்து பஞ்சணை மேவினுஞ் சேப்புறும் மருந்து கண்டிலா மாமலர்ச் சேயுடல் வருந்தி வீழ்ந்தொர் வடவன்கை யம்பினாற் பொருந்தி மண்ணிற் புரண்டுருண் டோய்ந்ததே. 28. கண்டி ரண்டக னும்புயல் கண்பட மிண்டி யோர்மலை மேல்மலை வீழ்தல்போல் ஒண்டி யேவிழுந் தோவென வேயழக் கண்ட தெவ்வருங் கண்கலுழ்ந் தாரரோ. 29. படிற னோடு பகைவர்க ளேயழின் குடிகள் சூழ்ந்தழல் கூறவும் வேண்டுமோ நெடியன் வீழ நிணம்படு போர்க்களம் அடுதல் மாறி யழுங்கள மாயதே. 30. துண்ணெ னக்கடந் துய்யவாள் பாய்பசும் புண்ணி னோடு புலம்பிப் பொருக்கென மண்ணில் வீழ்ந்த வடவனைக் கொண்டுபோய் உண்ணி யேமருந் தொத்தின ராரியர். 31. தம்பி நோவுறத் தானைத் தலைவரும் நம்பி னோர்களு நற்றவ மேலரும் வெம்பு சேனையும் வீவுறச் செய்தனன் கம்பி யென்றுவிற் கையன் புலம்பினான். 32. எண்ணி றந்த வினத்தரை யேழையேன் புண்ணி ருந்து புலம்பிடப் போயுயிர் மண்ணில் வீழ்ந்து மடிந்திட வையகோ பண்ணி னேனெனப் பாடிப் புலம்பினன். 33. இன்ன னாகி யினைய வடபுலன் அன்னை யாகியு மாகியுந் தந்தைமுன் மன்ன னாகியும் வாழ விருந்தவன் தன்னை யுன்னித் தமிழர்க ளேங்கினர். ------------------------------------------------------------------------------------------- 30. கடம் - உடல். மருந்து - உண்ணி - மருந்தூட்டி. 31. கம்பி - கடிவாளம் - கடிவாளம் போன்றவன். | |
|
|