பக்கம் எண் :


530புலவர் குழந்தை

   
         34.  பொன்னைத் தேக்கிலென் பூவைத் தொடுக்கிலென்
             தன்னை நேர்தமிழ்த் தாயிங் கிருக்கிலென்
             என்னை போனபி னென்னினி யீங்கென
             மன்னைக் காஞ்சி மருவிப் புலம்பினர்.

         35. செருவ கத்திறை வீழ்ந்தெனச் சீறியே
             ஒருவன் மண்டி யுடன்றெழுந் தொன்னலர்
             கருவ கத்தினிக் காண்பிலை யாமெனப்
             பொருக ளத்துப் புகுந்தடர்த் தார்த்தனன்.

         36.  செய்தி கேட்டதுந் தெவ்வ ரிலங்கையும்
             பொய்தி யாகப் பொருக்கெனப் போர்க்களம்
             எய்தி மக்களெல் லோரு மிறையெமக்
             குய்தி யுண்டோ வுலகிலென் றேங்கினார்.

         37.  உருளை போல வுருண்டன ரோர்சிலர்
             குருளை போலக் குதித்தன ரோர்சிலர்
             இருளை முன்பினு மீர்த்தன ரோர்சிலர்
             தெருளை நீத்துத் தியங்கின ரங்ஙனே.

         38.  ஆய காலைவண் டார்குழல் கைதலை
             தோய வேற்கண் டொடுமணற் கேணியிற்
             பாய வோவெனப் பாடிப் புலம்பியே
             போயொ ருங்கிறை வீழ்களம் புக்கனள்.

         39.  புக்க துந்தமிழ்ப் பூத்தபூங் கொம்பினைத்
             தொக்கு மேதமிழ்த் தோகை மயிலினம்
             செக்க மேனி சிவக்கச் சிவக்கறைந்
             தொக்க வோவென வோங்கி யழுதனர்.

         40.  புலம்பி னோடு புகுந்திறை மீதவள்
             அலம்பு வேடன தம்புற வேமயிற்
             குலம்பு லம்பிடக் குன்றினின் றேயயற்
             சிலம்பு வீழ்மயில் செத்து விழுந்தனள்.
-------------------------------------------------------------------------------------------
         34. என்ஐ - எனது தலைவன். மன்னைக்காஞ்சி - இறந்தவர் தன்மை கூறியிரங்கல். 37. குருளை - விலங்கின் குட்டி. இருள் - கூந்தல், தெருள் - தெளிவு. 40. அலம்பு - வறிய. புலம்பிட - தனித்திட. சிலம்பு - பக்கமலை, செத்து - போல.