பக்கம் எண் :


இராவண காவியம் 533

   
            50. மாரியென வேகுறையொன் றில்லாது
     காத்தெம்மை வந்தின் றேனோ
யாரெனவோ துயர்க்கடலு ளழுந்தியழ
     விட்டகன்றெம் மம்மே யப்பா
ஓரினமா மக்களைக்கொன் றுண்டதுவும்
     வேள்வியென வுரைத்தே மாற்றம்
பூரியரா மாரியர்க்கெங் களைக்காட்டிக்
     கொடுத்தெங்குப் போனீர் போனீர்.

51. பேரிருளைப் புறங்கண்டு பெருகொளியைப்
     பரப்பியருட் பெரியார் போலப்
பாருலகைப் புறந்தந்து பாலிக்கு
     மிருசுடர்போய்ப் பட்டாற்போலக்
காரிருளிற் கண்ணஞ்சாக் கள்வர்கள்தங்
     கைப்பட்டுக் கவல்வார் போல
ஆரியப்பாழ்ம் பேரிருளி லலையவிட்டுச்
     சென்றீரே யச்சோ வச்சோ.

52. உண்ணென்று படைப்பீர்மன் உடுத்தென்று
     விரிப்பீர்மன் உடன்றே யுள்ளம்
கண்ணின்று காயீர்மன் கல்லென்று
     சொல்வீர்மன் கனிதேன் பாகின்
விண்ணின்று நாட்பெய்யு மழையென்று
     வந்தீர்மன் வெறியே மேங்க
மண்ணொன்றி நின்றீர்மன் கல்லொன்றி
     னெவ்வாறு வாழ்வே மன்னே.

53. ஓங்கிவளர் பனம்பழத்தி னுள்ளெதினு
     மூன்றுகொட்டை யுண்டா னாலும்
பாங்குடைய மூன்றிலொன்று பொய்க்கொட்டை
     யாவதுபோற் பயன்பா டின்றித்
தீங்கடையார்க் காளடிமை யானகொடி
     யோன்குடைக்கீழ்த் தெளியார் போல
ஏங்கியழ விட்டகன்றீர் யாங்களிழைத்
     திட்டகுறை யென்னே யென்னே.

----------------------------------------------------------------------------
50. வேள்வி - நரமேதம். 51. புரந்தருதல் - காத்தல். 52. கண் - இரக்கம். 53. பொய்க்கொட்டை - உள்ளீடு இல்லாத கொட்டை, இது முளையாத. தெளியார் - பகைவர்.