பக்கம் எண் :


538புலவர் குழந்தை

   
         14. என்பெரு விருப்பம் போல இலங்கையை யெனக்குத் தந்த
            நின்பெரு தகைமைக் கொப்பிந் நீணிலந் தன்னி லுண்டோ
            தென்பகை கடந்தோய் நின்றன் தேவியி னோடு முன்போல்
            மன்பதை புகழ யோத்தி மன்னனா வாழ்க மாதோ.

         15. என்றுதன் னினத்தை யந்தோ இனப்பகை தன்னைச் சார்ந்து
            கொன்றவக் கொடியோன் கூறிக் கூப்புகை யோடு நிற்பத்
            தென்றமி ழிலங்கை வேந்தே சிற்றிடைப் பெருங்க ணாளை
            என்றனை யடையச் செய்க வென்றனன் கொலைவில் ராமன்.

         16. ஆரிய னீது கூற வடிமையாங் கிருந்து சென்று
            மாரிபெய் திருண்ட வானம் வறண்டுவெள் ளென்னு மாபோற்
            கூரிய விருகண் பூப்பக் கொள்ளொணாத் துயரத் தோடக்
            காரிகை யிருந்த வந்தக் கடிமலர்ச் சோலை புக்கான்.

         17. புக்கவன் பொலுஞ்செய் பாவை பொலிவிழந் திருக்கு மாபோல்
            ஒக்கலை யுறவை நட்பை யொருங்குட னிழந்து மீளா
            மிக்கவெந் துயரா லேங்கி மெய்ம்மறந் திருத்தற் கண்டார்
            நெக்கிட விருந்த வன்னாள் நிலையினை நெடிது கண்டான்.

         18. கண்டவ னிடியே றுண்ட கலையனாள் நிலையை நஞ்சம்
            உண்டவன் போல வேமுற் றுளந்தடு மாறி முன்னர்
            விண்டவ னிலையை யெண்ணி வெற்றுடல் போல ழைத்துக்
            கொண்டவ னிருந்த கோயில் குறுகினன் குறியொன் றில்லான்.

         19. ஆவிபோ யதென வோயா தழுதழு தழுது சும்மா
            காவியங் கண்கள் வீங்கிக் கவலைதோய் முகத்த ளாகி
            ஒவியப் பாவை கண்முத் துதிர்த்தென வுதிர்த்து நின்ற
            தேவியைக் கண்டி ராமன் செயலறு முளத்த னானான்.

         20. அய்யிரு திங்க ளாக அயலவ னிடத்து விட்ட
            வெய்யவ னென்று கொண்டு வெகுண்டனள் போலு மன்றி
            ஒய்யென வேகி யானு முவப்பன செய்கி லேனென்
            றய்யநுண் ணிடையாள் சீற்ற மடைந்தனள் போலு மன்றி.

         21. மனப்படு புட்போற் றூக்கி வந்தவன் றம்பி தன்னை
            அனுப்பின னென்றே யுள்ள மழன்றனள் போலு மென்றே
            எனப்பல வாறு தன்னு ளெண்ணிய பின்னி ராமன்
            புனப்படு மிளமான் கன்றே போதுவா யருகி லென்றாள்.