28. இராவிட மின்றி யலைகட லுலகத் தெங்கணும் பரந்தெவ ராலும் பராவிட வடங்கா வான்புகழ் படைத்தோன் பழந்தமிழ்ப் புலவர்நாப் பொலியுந் திராவிடர் தலைவன் செருக்களத் தொருவன் தென்றமி ழிலகையர் கோமான் இராவணன் றன்னைக் கொன்றெனை யடைந்தீர் இதிலொரு புதுமையு மின்றே. 29. மனைவியைக் களவி லெடுத்தகன் றவனோர் மறப்படைச் சிறப்புடை யவனா முனையினி லெதிர்த்து வெலற்கரி தான மொய்வலி யுடையவ னெனினுந் தினையள வேனும் மானமுள் ளவர்கள் திறலில ராயினு மன்னான் றனையுட னெதிர்த்துப் பொருதிட வஞ்சார் தன்மதிப் பதனியல் பிதுவே. 30. ஒருமயிர் நீப்பின் கவரிமா வாழா துயிர்விடு மாறுயர் மக்கள் மருவிய மானங் கெடவரி னுடனே மாய்குவர் மனையியைக் கவர்ந்தோன் பெருமுர ணுடையோ னென்னினும் வெருகுப் பிள்ளைகாண் சிற்றெலி போல அருமையென் றெதிர்க்க அஞ்சியே வாளா விருப்பது மழகிய தாமோ. 31. தன்பெடை யதனைப் பிடித்தகல் வோனைத் தான்வெலற் கரிதென வறிந்தும் வன்புடை யலகாற் கொத்தியுஞ் சிறகால் வலிகொடு தாக்கியும் முடிவில் முன்புடன் வெல்ல முடிகிலா அன்றில் முகில்கெழு வானுறப் பறந்தே அன்புடைப் பெடையின் பிரிவினை யாற்றா ததுதரை யினில்விழுந் திறக்கும். ------------------------------------------------------------------------------------------ 30. வெருகு - பூனை. 31. முன்பு - வலிமை, அன்றில் - ஒரு பறவை. | |
|
|