36. புனதுறை புட்போற் றனித்திருந் தேனைப் பொள்ளெனப் போந்தெடுத் தகன்றோன் தனைத்தகுங் கொன்ற தெனத்தகு மறைநூல் சாற்றிடு மென்பிரே யென்னில் இனித்தசெந் தேனுங் கசக்குறு தமிழில் எதிருரை யாடுவா ரின்றித் தனித்துல வியவத் தமிழ்பயி லமிழ்தத் தையலைக் கொன்றது தகவோ. 37. அன்னவள் செய்த வத்தகு பிழையென் ஆங்குநின் றகலுக வென்று சொன்னளோ சொல்லின் அஃதவள் புரக்கும் தொன்னில மாதலாற் சொல்ல அன்னவ ளுரிமை யுடையவ ளலளோ அவளர சினியலய லார்கள் துன்னுதல் தவறென் றன்னவ ளெடுத்துச் சொலல்கொலைக் குற்றம தாமோ. 38. மங்கையக் காம வல்லிதன் னெழிலான் மயக்கிவற் புறுத்தன ளென்னில் அங்கவள் மனத்தை யின்சொலான் மாற்ற அரியதோ வாண்மகற் கன்றேல் எங்கையர் தம்மி லொருத்தியா யவளும் இருத்தலி னாற்றவ றுண்டோ நங்கையாங் கிருக்கின் இக்கொடு நிகழ்ச்சி நடந்திருக் காதகொ லன்றே. 39. கண்கொள நின்று கனிமொழி பேசிக் கைபிடித் திழுத்தன ளெனினும் பெண்கொலை யதுவும் வன்கொலை புரியும் பெருந்தவ றாகுமோ புரிந்து மண்கொள லாற்றா வருந்திற லிலங்கை மன்னவற் கெரிசின மூட்டிப் பண்கொள நின்ற செந்தமி ழுள்ளம் பதைபதைத் தழன்றிடச் செய்தீர். ---------------------------------------------------------------------------------------- 38. எங்கையர் - தங்கையர் - இராமனின் மற்ற மனைவியர். | |
|
|