பக்கம் எண் :


இராவண காவியம் 543

   
          40.  கன்றிய காதற் கயிற்றினா லிறுக்கிக்
                   கட்டியே யிரண்டறக் கலந்த
              தன்றுணை யிழந்து தனித்துய ருழந்து
                   தாபத நோன்புநோற் றிருந்த
              நன்றறி தமிழ நங்கையவ் வாறு
                   நடக்குவ ளோநடை யின்றிப்
              பொன்றிடச் செய்து வென்றிவே லண்ணல்
                   பொறுமையை யிழந்திடச் செய்தீர்.

          41.  அத்தக மகளிர் நடந்ததா விதுகா
                   றெரிவையான் கேட்டது மில்லை
              இத்தமி ழுலகம் பொதுவறப் புரந்த
                   இறைமகன் தங்கையவ் வாறு
              கைத்திடு மாறு நடப்பளோ நடக்காள்
                   காதலின் பொருளறி யாது
              பித்தன செய்து முத்தமி ழண்ணல்
                   பெரும்பகை தேடியே கொண்டீர்.

          42.  கோப்பெருந் தேவி யாகிய வண்டார்
                   குழலிதன் னாருயி ரதனை
              நீப்பினை நேரிற் கண்டிரத் தகைய
                   நிலையினி லுளவவள் கொழுந்தி
              மாப்படு கானில் எதிர்ப்படு வோனை
                   வலியவற் புறுத்துவ ளோகொல்
              ஈப்பட லெனப்பெண் ணுலகினை யிவ்வா
                   ஈறிழிக்குத லுமக்கிழி வன்றோ.

          43.  தன்னுடன் பிறந்த தங்கையைத் தமிழ்போல்
                   தனித்துலா வுகையினி லந்தோ
              பொன்னுடல் நிலத்திற் புரண்டிட வுறுப்பைப்
                   பொருக்கென வறுத்துமே கொன்ற
              நின்னுடை மனைவி தன்னையவ் வாறு
                   நெடுநிலத் துருண்டிட வவற்றை
              அன்னவ னறுத்துக் கொன்றுதன் வெகுளி
                   யதுதணிந் தானெனி லில்லை.
----------------------------------------------------------------------------------------
          40. கன்றிய - முதிர்ந்த. நடை - ஒழுக்கம். 42. ஈபடல் - ஈமொய்த்தல் - மலம்.