52. நெஞ்சினி லச்சொற் சுருக்கெனத் தைக்க நின்பிரி வினைநெடி தெண்ணி அஞ்சியா னழுது தொழுதயர்ந் திருப்ப அருந்தமி ழண்ணலும் அயரேல் வஞ்சியே யுனைநான் வஞ்சியேன் என்ற வாய்மொழி யினையிது காறும் விஞ்சிடா தென்னைத் தந்தைபோ லினிது விருப்புடன் போற்றியே வந்தார். 53. தந்தையுந் தாயும் போலயா னுவப்பத் தானடிக் கடியிறை மகனும் வந்தியான் விரும்பும் வரிசைகொண் டினிது மாபெருந் தேவிதன் னோடு கொந்தவிழ் நறுந்தேன் பாலொடு பாகு கூடினு நேருறா வினிய செந்தமிழ் மொழியா லினிதுரை யாடிச் சிறியனே னுவப்புறச் செய்தார். 54. தம்மக ளாகக் கொண்டன ரென்னைத் தகவொடு தமிழ்பயில் வாயால் ‘அம்மணி’ யென்றுள் ளன்புட னின்பாய் அழைத்துவந் தனரதை யானும் அம்மணி யென்னப் பகுத்தக மகிழ்வேன் அழகிய மணியெனக் கொண்டு செம்மணி யனையான் பெருமையை யெடுத்துச் செப்புதற் கெளியதோ சிறியேன். 55. மங்கையுன் கணவன் பிரிவினை யெண்ணி வருந்தலை வாய்மொழி தவறேன் இங்கவ னெய்தும் வரைகுறை யஃதொன் றின்றியே யென்னுடன் பிறந்த தங்கையி னிலையி லிருக்குவை யினிது தனிமையை மறந்துமே தமிழ நங்கைய ரோடு கூடியே யென்ற நன்மொழி யென்மனத் தகன்மோ. ------------------------------------------------------------------------------------------- 52. சிறை செய் படலம் 47 செய்யுள் பார்க்க. 54. அம்மணி. அம் - அழகு. | |
|
|