பக்கம் எண் :


இராவண காவியம் 547

   
        56.   ஈங்கவ ரெடுத்து வந்தெனைத் தனியா
                  இருஞ்சிறை யிட்டுமே நின்னை
             நீங்கிய துயரால் நெஞ்சநெக் குருகி
                  நினைந்தழச் செய்தில ரிலங்கை
             மாங்குயி லனைய தமிழிள மகளிர்
                  வண்டலிற் றிளைத்துநா ணாளும்
             ஓங்கிய வின்ப முற்றவர் போல
                  உவப்புட னிருந்திடச் செய்தார்.

        57.   நாட்டுட னயோத்தி நகரினை விடுத்து
                  நலிதரு விலங்குவாழ் கொடிய
             காட்டினி லலைந்து திரிந்துபல் லாண்டைக்
                  கழித்தனன் தனியளாய் யாழின்
             பாட்டளி முரலும் பொய்கைசூ ழிலங்கைப்
                  பைந்தமிழ் மகளிர்தம் மோடு
             கூட்டணி யாகக் கூடியா னீங்கோர்
                  குறையிலா தினிதுவாழ்ந் திருந்தேன்.

        58.   கண்ணைவிட் டகலா இலங்கைமா நகரின்
                  காட்சிகண் டுளங்களி கூர்ந்தும்
             பண்ணைவிட் டகலா மெல்லியல் நல்லார்
                  பைந்தமிழ்ப் பாடல்கேட் டுவந்தும்
             எண்ணைவிட் டகலா வின்புறு தக்க
                  இயலிய பயிலியின் புற்றும்
             மண்ணைவிட் டகலா விருப்பொடு கரப்பில்
                  மகிழ்வொடு வாழ்ந்துமே வந்தேன்.

        59.   தேனினு மினிய தீந்தமிழ் கற்றும்
                  செந்தமிழ் மகளிர்தம் மோடு
             தானெனத் தனித்த ஏழிசை பயின்றும்
                  தமிழென வினிமையிற் றிளைத்தும்
             வானினு முயர்ந்த மாடநீ டிலங்கை
                  மாநக ரிதனிடை வானின்
             மீனினுஞ் சூழ்ந்த மதியென முதிய
                  மெல்லிய லாருட னிருந்தேன்.
---------------------------------------------------------------------------------------
        56. வண்டல் - மகளிர் விளையாட்டு. 58. பண்ணை - விளையாட்டு. எண் - எண்ணம். 59. முதிய - மிக்க