60. தண்டமிழ் மக்கள் தங்கள்தாய் மொழிபோல் தன்மையு மினியரென் பதற்குக் கண்டனோர் சான்றோர் கனிமொழி யோடு கழல்விளை யாட்டினிற் றோற்று வண்டலிற் றோற்றேன் மாமிநா னென்ன மங்கைநீ தோற்றிலை கற்றுக் கொண்டனை மகர வரிசையை யென்றக் கொத்தலர் குழலுவப் பித்தாள். 61. நகைச்சுவை தோன்ற நம்மொழி பயின்ற நாவினால் நான்தமிழ் பேச முகச்சுவை தோன்ற வெறுப்பிலள் விருப்பின் முறையொடு குறைசிறி தின்றி மிகச்சுவை தோன்ற விரைந்துதாய் மொழிபோல் விரும்பிடத் தமிழர்கள் நானிவ் வகைச்சுவை தோன்றச் செந்தமிழ் பேச வைத்தவ ளெனைமகிழ் வித்தாள். 62. இனியவர் நல்லார் எனும்பெயர்ப் பொருளுக் கிலக்கிய மாகியே யினிய கனியன சொல்லார் கடுமொழி யில்லார் காய்சின முறவெது செயினும் முனிவன வில்லார் முகஞ்செய வல்லார் முத்தமி ழெனவினி தீன்ற அனையன வன்பிற் றிகழ்தமிழ் நல்லார் அரவணைப் பினிலினி திருந்தேன். 63. பெற்றவ ளன்பி லாமலோ வுலகப் பெரும்பழி நாணியோ பெற்ற மற்றவ ளாங்கோ ருழுபடைச் சாலில் வைத்துமே சென்றனள் மிதிலைக் கொற்றவ னெடுத்து வந்துய ரன்பு கொண்டெனை வளர்த்தது போல வெற்றிவே லண்ண லெடுத்துவந் தென்னை விருப்புடன் வளர்த்துமே வந்தார். --------------------------------------------------------------------------------------- 60. மாமி, என்றது ஆரிய வழக்கு, ம மா மி - மகர வரிசை. இது சீதை தமிழெழுத்துப் பயின்ற காலம். 61. நம்மொழி என்றது ஆரிய மொழியை. ஆரியர் பேசும் தமிழ் நகைச்சுவைக் கெடுத்துக் காட்டுப் பொருளாகும். முகச்சுவை - இன்முகம். | |
|
|