பக்கம் எண் :


இராவண காவியம் 549

   
        64.   ஆங்கவ ரெடுத்து வளர்த்தெனக் கெந்தை
                  யாயின வாறுபோ லைய
             ஈங்கிவ ரெடுத்து வளர்த்தெனக் கெந்தை
                  யாவதற் கென்றடை யன்றி
             ஆங்கவர் கொடுக்க உவந்தெனை யேற்றீர்
                  அங்ஙன மேநனி விரும்பி
             ஈங்கிவர் கொடுக்க வருகென வென்னை
                  யேற்றிட வந்தில தேனோ.

        65.   வந்தெனை யழைத்துச் செல்லுக வென்று
                  வஞ்சியா னிலங்கையி னன்று
             வந்தவவ் வனுமன் றன்னிட முரைத்து
                  வாயிலாய் விடுத்ததை மறுத்து
             வந்தனி ரெடுத்துக் களம்வகுத் திலங்கை
                  மன்னனைக் கொன்றனி ரில்லை
             எந்தையைக் கொன்றே யெனையழு தேங்கி
                  யிரங்கிடச் செய்தனி ரன்றே.

        66.   எடுத்துவந் திறுத்த பின்னரும் பொறுமைக்
                  கிலக்கிய மாயவன் றூது
             விடுத்தன னதையும் மறுத்தெதி ரந்தோ
                  வெங்களம் வகுத்தவ னுயிரைக்
             குடித்தனிர் வாகை முடித்தனி ருவகை
                  கொண்டனிர் கண்டனி ரென்னை
             நடத்தனிர் சென்று முதுநக ரயோத்தி
                  நன்குவீற் றிருக்குவ மன்றே.

        67.   அன்றுடன் பிறப்பைக் கொன்றது மயோத்தி
                  யன்றியிவ் வுலகிலெங் கேனும்
             சென்றொளித் திருப்பி னுங்கட லுலகே
                  சேர்ந்தொருங் கெதிர்க்கினு மைய
             வென்றெறி முரசோன் வேலுயி ருண்ணா
                  வெஞ்சினந் தணிந்திடு மோகொல்
             என்றனை யெடுத்து வந்தது மன்னான்
                  இரும்பெருங் குணச்சிறப் பன்றோ.
----------------------------------------------------------------------------------------
        65. வஞ்சியான் - வஞ்சியாகிய யான் (சீதை) எனவும், வஞ்சனை செய்யாத இராவணன் எனவும் நயமாகக் கொள்க. 66. நடத்தனிர், நடந்து - முற்றெச்சம், வலித்தல் விகாரம்.