68. அன்றிலைக் குடிலிற் கண்டதுந் தனியாய் அடற்கதிர் வேலவ னென்னைக் கொன்றிருப் பினுமீங் கெடுத்துவந் ததுமே கொலைபுரிந் திருக்கினு மைய இன்றெனை யடையப் பெற்றிருப் பீரோ ஈடெடுப் பிலாத்தமி ழிறைவன் குன்றினி முயர்ந்த குணப்பெருக் கன்றோ கொடியளை யடைதரப் பெற்றீர். 69. வண்டுமொய் குழலைக் காதுமூக் கறுத்து வன்கொலை செய்தது போலக் கண்டது மென்னைக் காதொடு மூக்கோ கையொடு காலினை யறுத்துத் துண்டுதுண் டாகத் துணித்தென துடலைத் தூக்கிநாய் நரியுண வெறிந்து கொண்டதன் வெகுளி தணிந்திருப் பாரேற் குறுக்கினில் நிற்குநர் யாரே. 70. அல்லதூஉ மானை விடுத்தெனைத் தனிய ளாக்கியன் றெடுத்தக லாது வல்லிதிற் றானே வந்திலைக் குடிலை வளைத்திருந் தாலிரு வீரும் வில்லினை வளைத்து வெற்றிகண் டிருப்பீர் மேம்படு தமிழர்பண் பாட்டால் அல்லவோ நீரும் பிழைத்தனி ரென்னை அடையவும் பெற்றனி ரைய. 71. திரண்டநுந் தானைப் பெருக்கினைக் கொண்டு செருவினி லிலங்கையர் கோனை வெருண்டுவெந் நிட்டோட் டெடுத்திடச் செய்து வென்றனிர் கொன்றனிர் இல்லை இரண்டகத் தமிழர் தங்களைக் கொண்டே எந்தையைச் செந்தமி ழிறையைப் புரண்டிட மண்ணிற் செய்துமே வென்றிப் புகழினை யடைந்தனி ரன்றே. | |
|
|