பக்கம் எண் :


இராவண காவியம் 551

   
        72.   வளமலி யிலங்கை யரசினை வேண்டி
                  வந்துநுங் காலினில் வீழ்ந்த
             இளவலி னோடு நீலனே முதலா
                  இழிதகைத் தமிழர்க ளான
             உளவரைக் கொண்டு வென்றனி ரலதிவ்
                  வுலகமே யொருங்கெதிர்க் கினுமக்
             களமதில் வென்றி காணுவ மென்று
                  கனவுகா ணலுமெளி தாமோ.

        73.   அன்புட னீங்கு வருகென வழைத்த
                  அழைப்பினை யேற்றுவந் திருக்கின்
             இன்புடன் வரிசை பலவுட னென்னை
                  ஈந்துவந் தயோத்திமா நகர்க்குத்
             தென்புடன் சென்று வருகென அவர்போற்
                  செய்துமே யிருப்பர்கொ லன்றோ
             துன்புட னென்னை யடைந்திட நீரும்
                  துணிந்ததன் காரண மென்கொல்.

        74.   மடைவளர் மலரை யடைதர விழைந்தம்
                  மலர்கமழ் தரவமை கொடியை
             அடியொடு வேரோ டழித்ததை யடைய
                  அவாவுறு பேதையர் போலக்
             கொடியசைந் தாடும் நெடுநிலை மாடக்
                  குளிர்தமிழ் வளமலி யிலங்கை
             நெடியனை யழித்திக் கொடியனை யடைய
                  நினைத்ததன் கருத்தறி கில்லேன்.

        75.   பாட்டியை யொன்றோ உடன்பிறந் தாளை
                  பகைசிறி தின்றியே கொன்ற
             கேட்டினை மறந்து தமிழருக் கியல்பாங்
                  கெழுதகைப் பெருங்குணத் தாலுன்
             ஆட்டியை யெடுத்து வந்துதன் மகள்போல்
                  அன்புடன் வளர்த்தவவ் வண்ணல்
             மாட்டுநீர் கொண்ட பகைமைதா னென்னே
                  மங்கையான் தெரிந்திலள் கொல்லே.
--------------------------------------------------------------------------------------
        73. அவர் என்றது சனகனை.