பக்கம் எண் :


இராவண காவியம் 555

   
        11. பகைவ னோடுடன் பிறந்தவ னென்பதூஉம் பாரா
           அகம கிழ்வுற வேயெனை யாள்விடுத் தழைத்துத்
           தகவ னாக்கியே யிலங்கையாள் பரிசினைத் தந்தே
           உலக னாக்கிய வுதவியான் மறப்பதி லொன்றோ.

        12. மைதி கழ்விழி மானினை யெடுத்துமே வந்த
           உய்தி யில்லவன் உடன்பிறப் பென்பது மோரா
           எய்தி னேனிலை யோதமி ழிலங்கையை யீந்த
           செய்தி கொல்லுவ னோவுயி ரேகினுஞ் சிறியேன்.

        13. இனைய பற்பல விழிதக வுடையன வியம்பிப்
           புனைம லர்க்கழல் முடியுறப் படிமிசைப் பொருந்தி
           எனைய னேயெனாற் செயத்தகு வனவுனக் கேதோ
           துனைய னேன்செயும் படிபணித் தருள்கெனத் தொழுதான்.

        14. தொழுதெ ழுந்தவவ் வடிமையை வடமகன் றுணைவா
           எழுது மோவியந் தன்னினு மழகுடை யிலங்கை
           விழுது போலநீ தாங்குதற் கென்படை வீரர்
           தொழுதி செய்குவ ரிவணிருந் தேபெருந் துணையே.

        15. எம்மி னத்தரிங் கிருப்பதற் கெவ்வகை யூறும்
           உம்மி னத்தவர் செய்திடாச் செய்வதீ தொன்றோ
           உம்மி னத்தவர்க் குரியவா முரிமைக ளெல்லாம்
           எம்மி னத்தரு மியல்பினி லெய்திடச் செய்வாய்.

        16. எய்தி யுள்ளவெம் முரிமையை யென்றுமே தமிழர்
           கொய்தி டாதுசெய் வாயது வன்றியெங் குலத்தர்
           எய்தி யிங்குவாழ் வதற்கொரு தடையிலா தென்றும்
           செய்தி மற்றுநும் மவர்பகை கொளாமலுஞ் செய்வாய்.

        17. உங்கள் தாய்மொழி யுங்களுக் குரிதுபோ லுயர்ந்தோய்
           எங்கள் தாய்மொழி யெங்களுக் குரியதா லீங்குத்
           தங்கி வாழ்ந்திடு மெம்மவர் தாய்மொழி தன்னை
           இ்ங்குப் பேசவுங் கற்கவு முரிமைசெய் யென்றும்.

        18. பின்னு மெம்மவர் பிறப்புரி மையினெதும் பிழையா
           நன்ன லம்புரிந் திடுகமற் றெங்கள்நன் னாட்டில்
           இன்னு முன்குறும் பரும்படை யெடுத்திடா திருக்க
           மன்ன கட்டளை யிடுகுவை யன்னர்க்கு வகுத்தே.
-------------------------------------------------------------------------------------
        11. உகவன் - மகிழ்ச்சியுடையவன். 13. துனையன் - விரைவில் செயல் புரிபவன்.