19. மண்ண வாவியான் றமிழகம் வரவிலை மன்னா விண்ண வாவிய வேள்விசெய் தெங்குல மேலோர் உண்ண வாவிய தொழித்தரை யொழித்தவர்க் குரிமை பண்ண வாவியே வந்தன னறிகுவை பதைத்தே. 20. என்று கூறவே யிரண்டக னிணையடி வணங்கி நன்று நன்றுயா னின்னும்வேண் டியவெலா நயப்பேன் கொன்று தின்பதை யன்றிவே றெதையுமெங் குலத்தர் அன்றெ னாரென வகத்தியன் கேட்டியென் றறைவான். 21. வேள்வி செய்தலா லுண்கில மினியந்த வேள்வி ஆள்வி னைக்குயர் வலியுடைத் தென்பதை யரசே கேள்வி வல்லவர் கிளக்குவர் தமிழர்கள் கேட்டே நாள்வ ளம்பட நம்புவ ரெனவவன் நவின்றான். 22. எனிற்பு கன்றதன் படியுமர் வாழவே யெம்மோர் இனித்த டுக்கிலா திருந்திடச் செய்குவே னென்றான் தனித்து முன்னவர் தேடிய தமிழ்க்கரு வூலம் அனைத்தும் போக்கியிந் நிலையுறச் செய்யிரண் டகனும். 23. என்று கூறச்சுக் கிரீவனு மெழுந்தெம திறைவா நன்று செய்யவே யுதவுவ னியன்றதை நானும் வென்று பேரர சளித்தவன் குலத்தினர் வெறுக்கின் அன்று போலயா மடிமைகொண் டலைகுவ மென்றான். 24. மின்னை வீழ்த்தியே யொளிமிகுந் தமிழக விந்தந் தன்னை நாத்தழும் பாதுகாத் துயர்பழந் தமிழ மன்னை வீழ்த்தியே யாரியர்க் கடிமையா வந்த மன்னர் வாழ்த்தியா மாமென வழிமொழி வகுத்தார். 25. படியி னன்றிகொன் றார்க்கிலை யுய்தியொப் பந்தப் படிந டக்கிலே னெனிற்றச ரதன்மகன் பகையாய் அடிமை யாகியே யலைகுவேன் முன்னைபோ லாணை படைவ லோயிதி லையமின் றெனவடி பணிந்தான். 26. பணிந்து கூறிய விரண்டகற் றழுவியப் பாவி துணிந்து ளேனறி வொழுக்கமிக் குடையையுன் சொல்லைத் தணிந்து வாழ்கென வாழ்த்தினன் மணிமுடி தன்னை அணிந்து பேரர சாக்கிய வகையினை யறைவாம். --------------------------------------------------------------------------------- 20. நயப்பேன் - விரும்பிச் செய்வேன். 21. ஆள்வினை - போர். நாள் வளம்பட - நாள் ஆக ஆக. 26. தணிந்து - நிறைந்து. ரைவில் செயல் புரிபவன். | |
|
|