பக்கம் எண் :


இராவண காவியம் 557

   
16. முடிசூட்டுப் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
         1. அந்தநா ளேக விவ்வா றடுத்தநா ளயோத்தி ராமன்
           மந்தநா ளயோத்தி விட்டு மொய்குழ லோடு கானம்
           வந்தநா முடிந்த தன்றோ மணிமுடி புனைந்து பின்னோய்
           இந்தநா ளேநன் னாளா வேகுநா ளாகச் செய்வாய்.

         2. என்றவன் கூறக் கேட்ட விளையவன் றொழுது நீங்கிச்
           சென்றவ னிடத்து முன்னோன் றெளித்ததை யெடுத்துக் கூற
           நன்றென நாடு கொண்ட நஞ்சினுங் கொடிய பாவி
           வன்றிறல் மறவர் தம்மால் மணிமுர சறைவித் தானே.

         3. உருமென முரச மார்த்தே யூனரு முளவு ளாரும்
           தெருவினி லங்கு மிங்குத் திரிதரத் திருடர் போல
           வருவர்போ குறுவ ராக வழக்குடைத் தமிழர் தம்மில்
           ஒருவருஞ் செவிசாய்க் காம லூமர்போற் சென்றா ரம்மா.

         4. விண்பட முழக்கிச் செல்லும் வீணர்கள் முரசி னோசை
           கண்படுங் காலை வெட்டுங் கயவர்போ லயலார்ச் சேர்ந்து
           மண்பட விறையை வீழ்த்த வஞ்சகன் செயல்முன் னோடிப்
           பண்படுஞ் செவியில் நெய்தற் பறையெனப் பட்ட தன்றே.

         5. அண்ணனைக் கொன்ற பாவிக் கடிமையா யலைதல் நீத்துத்
           தண்ணறுங் கானஞ் சேறல் சாலவு நன்றென் பாரும்
           உண்ணென வொருவ னூனை யொருவனுக் கொருவ னீயத்
           திண்ணென வுண்பா னென்ன செயத்துணி யானென் பாரும்.

         6. பருகிய நஞ்சு போலப் பாழ்படத் தமிழர் தம்வாழ்
           வெரியென வெதிரில் வந்தான் என்செய்யா னினியென் பாரும்
           கரவினில் மான மின்றிக் கள்வர்போ லயலார்ச் சார்ந்த
           ஒருவனோ தமிழர் வாழ்வுக் குரியவன் காணென் பாரும்.
---------------------------------------------------------------------------------------
         1. நாம் வந்த - நாம் வந்த காரியம். 3. ஊனர் - வடவர். உளவுளார் - இரண்டகத் தமிழர். 4. கண்படும் காலை - தூங்கும்போது. நெய்தற்பறை - சாப்பறை.