7. செம்மணி யோடு நஞ்சு சேர்ந்துள வாறு போல எம்மிறை யோடிப் பாவி யேன்பிறந் தானென் பாரும் இம்மியி னளவு மான மின்றியே பகைவன் காலிற் றம்மென வீழ்ந்தா னோசெந் தமிழருக் கிறையென் பாரும். 8. நிலமுள தனையு நீங்கா நெடும்புகழ் படைத்த மன்னர் குலமுள தனையு நீங்காக் கொடும்பழி தேடிக் கொற்றக் கலமுள தனையும் ஏந்திக் கரவினி லயலார்ச் சேர்ந்து வலமுள தனையும் விட்ட மானியோ விறையென் பாரும். 9. ஆரியர்க் குரிய தேயோ வருந்தமி ழகமென் பாரும் ஆரியன் கொடுக்க வன்னா னப்பன்சொத் தோவென் பாரும் பூரிய னரச னாகப் பொன்முடி புனையு நாளில் ஊரையொப் பனைசெய் யாதீ ரொருவரு மேயென் பாரும். 10. இன்னண முரைப்பா ரன்றி யிலங்கையி லொருவ ரேனும் மன்னவன் வாழ்க வென்று வாழ்த்தினா ரில்லை யாகத் தன்னிக ரில்லாத் தூய தமிழர்க ளிலங்கை தன்னை இன்னுயிர் கழிந்து நின்ற யாக்கையோ லாக்கி னாரே. 11. சிற்றில்க ளின்றி யெல்லாத் தெருக்களும் வறுமை தாங்கும் முற்றில்க ளெல்லாம் வீட்டு மூலையை மருவிச் சோங்கும் நற்றமிழ்ச் சிறுவர் கையை நடைவண்டி நண்ணா தேங்கும் தெற்றியி னகங்கள் தோறுஞ் சிறுபறை வறிது தூங்கும். 12. நீரகங் கலவைச் சாந்த நிழலையு மறிகி லாநீர் சேரகஞ் சிறுவர் தங்கள் சேவடி நிழலுங் காணா ஊரகஞ் சோலை யாத்த வூசல்க ளோய்வு பூணும் கூரகங் கனிந்தா டுஞ்செய் குன்றங்கள் வறிது காணும். 13. பாடில ரிசையும் பாட்டும் பண்ணிலர் பறையும் யாழும் ஆடிலர் கூத்தும் பந்து மவிழ்த்தில ரேடுங் கோடும் கூடிலர் பண்ணை யாயங் கொண்டிலர்க் குரவை யாட்டம் ஊடில ருணர்வு மில்ல ருயிர்செலா வுடல்போன் றாரே. ------------------------------------------------------------------------------------- 7. தம் என - அரசுதாவென. 8. தனையும் - அளவும். வலம் - வலி. மானி - மானமில்லான். 11. சோங்குதல் - மறத்தல். தூங்கும் - தொங்கும். 12. ஊரகஞ் சோலை - மெலித்தல் விகாரம். அகம் கூர்கனிந்து - மனமிக மகிழ்ந்து. 13. பண்ணை - விளையாட்டு. ஆயம் - விளையாட்டு மகளிர்.. | |
|
|