பக்கம் எண் :


இராவண காவியம் 559

   
         14. உண்டிலர் பாலுஞ் சோறு முடுத்திலர் பட்டும் பஞ்சும்
            அண்டிலர் தாயர் முன்ன ரணிந்திலர் கலனும் பூவும்
            கொண்டிலர் குழலி னைம்பாற் குழைத்திலர் மையுஞ் சாந்தும்
            கண்டிலர் நிலைக்க ணாடி கலையிலா மதியம் போன்றார்.

         15. ஓவியப் படங்கள் பாதி யுருவொடு கிடக்கு மோர்பால்
            பாவையுங் கழங்குங் கையின் பகையென வுறங்கு மோர்பால்
            பூவையுங் கிளியுங் கூட்டிற் புல்லெனப் புலம்பிச் சோரும்
            ஓவறுங் குழவி யும்பா லுண்டிலா துயங்கு மம்மா.

         16. கண்ணிமைத் துணைமைக் கோலங் கண்டிலா தினையு மம்பொற்
            சுண்ணம தறியா மேனி தொய்யிலை யறியாத் தோள்கள்
            எண்ணெயு மலரும் பின்னு மின்றியே யினையுங் கூந்தல்
            வண்ணமு மணமும் பூச்சு மாதரைப் பகைத்த தம்மா.

         17. மனையணி செய்தா ரில்லை மறுகணி செய்தா ரில்லைப்
            புனைவன புனைந்தா ரில்லைப் பொடிகொடு பொலிந்தா ரில்லைக்
            கனைகடல் நடுவண் வந்த கலங்கவிழ்ந் தினைவார் போலப்
            பினைமதி லிலங்கை மூதூர் பேரிழ வெடுத்த தம்மா.

         18. வீடெலாம் விளக்க மில்லை வெளியெலாந் துலக்க மில்லை
            மாடெலாம் புரக்க வில்லை வாயெலாம் பெருக்க வில்லைக்
            கோடெலாங் கொடிக ளில்லைக் கொடியெலா முடைகளில்லைப்
            பீடுலா மிலங்கை மூதூர் பித்தர்போற் றோன்றிற் றம்மா.

         19. கரிபிளிற் றில்லை நாளங் காடிகள் திறக்க வில்லைப்
            பரிகனைப் பில்லை யெங்கும் படர்களி னார்ப்பு மில்லைப்
            பெரியவர் பேச்சு மில்லைப் பிள்ளைகள் கீச்சு மில்லை
            விரிகட லிலங்கை மூதூர் வெற்றுடல் போன்ற தம்மா.

         20. திரண்டுள வெதுகை மோனை செந்தொடை யியைபி னோடு
            முரண்டொடை யென்ப போல முன்னக்குப் பின்னா மூத்தார்
            மருண்டிட முறைமை கொன்றே வடமகன் காலில் வீழ்ந்த
            இரண்டகச் செயலைக் கோல மிட்டனர் கரியா லெங்கும்.
------------------------------------------------------------------------------------
         15. புல்லென - பொலிவின்றி. புலம்பல் - தனித்தல். ஓவு அறும் - ஒழிவில்லாத. உயங்கும் - வருந்தும். 16. பொற்சுண்ணம் - மணத்தூள். தொய்யில் - தோட் கோலம். 18. மாடு - வீட்டுப்பக்கம், வாய் - வாயில். கோடு - மனைமுடி. கொடி - ஆடையுலர்த்துங் கொடி.