பக்கம் எண் :


இராவண காவியம் 57

   
     தெரிந்திருக்குமென்றே நம்புகிறேன். தெரிந்திருந்தோ, தெரிந்தத்
தெரியாமலுமிருந்தோ, அல்லது தெரியாமலேயிருந்தோ கேட்டிருந்தாலும் சரி. ‘எதற்கு’
என்பதை அறிவுறுத்த வேண்டியது, அவர் புரிந்து கொள்ளும்படி விளக்கிக் கூறுவது,
அவருடைய இப் பேரையத்தைத் தீர்த்து வைப்பது நம் கடமையாகும்; இன்றியமையாத
கடமையுங்கூட ஆகும்.

     ழுஇராவண காவியம் எதற்கு?ழு என்ற இக்கேள்வியாரால், எப்போது, ஏன்
கேட்கப்பட்டது? பழந் தமிழராகிய நம் முன்னையோர் ஒழுக்க முறைகளை நாமும்
அறிந்து கொள்வதற்காகப் பேரிலக்கண நூல் - தொல்காப்பியம் - செய்து வைத்த
தொல்காப்பியர் இருக்க, தமிழர் வாழ்க்கைச் சட்டநூலும் உலகப் பொதுநூலுமான
ஒப்புயர்வற்ற திருக்குறளை நமக்குத் தந்த வள்ளுவர் இருக்க, பழந்தமிழ் மக்களின்
அகம்புற வாழ்வை அருந்தமிழ்ப் பாக்களால் வகைபெற அமைத்துக் கொடுத்த
பன்னூற்றுக் கணக்கான சங்கப் புலவர்களிருக்க, கற்றார் கல்லாதார் ஆகிய எல்லாத்
தமிழ்மக்கட்கும் அறிமுகமானவரான ஒளவையார் இருக்க, இமயமுதல் குமரிவரை ஒரு
மொழி வைத்தாண்ட தமிழர் பெருமைக்கோர் அகச்சான்றாக உள்ள சிலப்பதிகாரத்தைச்
செய்த இளங்கோவடிகள் இருக்க, இன்னும் எத்தனையெத்தனையோ செந்தமிழ்ப்
புலவர்களிருக்க, அவர்களுக்கெல்லாம் திருநாட்களில்லை, பெருநாட்களில்லை,
கொண்டாட்டமில்லை, மாநாடுகளில்லை. அவர்களிற் பலர் பெயரினைக்கூடத் தமிழ்
மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில்லை; அறியவும் விடுவதில்லை. ஆனால்
     அப்புலவர்களி லொருவரான கம்பருக்கு மட்டும் திருநாளும் பெருநாளும்
கொண்டாடப்பட்டு வருகின்றன; ஆண்டுதோறும் பல இடங்களில் மாநாடுகள்
நடத்தப்படுகின்றன. ஏன்?

     அங்கேதான் இருக்கிறது நுட்பம். அது ஒரு தந்திரம் என்றுங்கூடச் சொல்லலாம்.
அது ஒரு கூட்டத்தாரின் தன்னலமென்பதே பொருத்தமானதாகும். எங்ஙனம்? மேல்
எடுத்துக்காட்டிய புலவர் பெருமக்களெல்லாரும் தமிழர் வாழ்வுக்காக, தம்
இனப்பெருமைக்காகத் தம் தமிழ்ப்புலமையைப் பயன்படுத்தினர். கம்பரோ, தமிழர்
வீழ்வுக்காக, தமிழினப் பகைவரான ஆரியர் வாழ்வுக்காகத் தம் தமிழ்ப் புலமையினை, தம்
தமிழ்க் கவித்திறத்தினைப் பயன்படுத்தினார்; தமிழினத்தை ஆரியத்துக்கு, ஆரியர்க்கு
அடிமையாக்கத் தமது தமிழ்க் கவித்திறத்தினைப் பயன்படுத்தினார்; அதற்குத் தம் தமிழ்க்
கவித்திறத்தினைக் கருவியாகக் கொண்டனர் எனலாம்.