தன்மையால் இன்னின்ன கொடுமைகள் செய்தான் என்பன எங்ஙனம் ஒருவனுடைய பராக்கிரமமாகும்? கொலைஞர், திருடர் முதலியோரும் செயற்கரிய அரும்பெரும் ஆற்றல்மிக்க செயல்கள் தாம் செய்கின்றனர். அவை உலக மக்களால் ‘பராக்கிரமம்’ என்று புகழப்படுகின்றனவா? கோட்சே என்பான், உலகம் போற்றும் உத்தமர் காந்தியடிகளைச் சுட்டுக் கொல்லும் அளவுக்கு அத்தகு அரும்பெருஞ் செயலைத்தான் செய்தான். பகுத்தறிவுடைய எந்த ஒரு மகனாலும் செய்யமுடியாத செயற்கருஞ் செயல்தானே அது? கோட்சேயின் அச்செயற்கருஞ் செயலை அவனது பராக்கிரமம் என்னலாமா? அது ‘செயல்’ என்னும் சொல்லின் செம்பொருளாகுமா? ஒரு போதும் ஆகாது. இவ்வாறுதானே இராவணன் கொடியன் என்னும் முறையில் இராவணனுடைய செயற்கருஞ் செயல்கள் பல கம்பரால் சித்திரிக்கப்படுகின்றன? ‘அறக்கொடியோனான இரக்கமென்றொரு பொருளிலா அரக்கன், உலக மாதாவாகிய சீதாபிராட்டியாரைத் தூக்கிச்சென்றனன்; பாவியாகிய இராவணன் அன்னை சீதாபிராட்டியைப் பலவாறு துன்புறுத்தினன், பலவந்தம் செய்தனன் என்பன போன்றவை தாமே கம்பரால் சித்திரிக்கப்படும் இராவணனுடைய பராக்கிரமங்கள்? இவை எங்ஙனம் அவனுடைய பராக்கிரமங்கள் ஆகும்? இரக்கமில்லாத அரக்கனின் அறக்கொடுஞ்செயல்களல்லவோ இவை? இவையா இவ்வுலகையே கட்டியாண்ட, ஏன்? ஏழுலகையுமேகூட அடக்கியாண்டவன் எனப்படும் ஓர் ஒப்பற்ற தலைவனின் புகழுக்குரியவை? ‘ஈச்சுரன்’ என்னும் பட்டப் பெரியனைத் தனியுடைமையாகப் பெற்றிருந்த ஒரு மாவீரனுக்குக் கூறப்படும் பராக்கிரமங்கள்? ஆனால், இராவணன் பகைவனான வடவாரிய ராமன், தமிழ்க் கம்பரால் கடவுளாக்கப்படுகிறான். தம்மினத்தவளான தமதரச குடும்பப் பெண்ணான காமவல்லியை (சூர்ப்பநகை) உருக்குலைத்த இராமன் செயல் அறச்செயல் எனப்படுகிறது. அக் கொடுஞ் செயலைச் செய்த இராமன், பெண் கொலை செய்தும், ஏன்? மூக்கு முலையறுத்து, வன்கொலை செய்தும் கம்பரால் அறம்வளர்த்தோன் எனப் புகழப்படுகிறான். தன் உடன் பிறப்பை உருக்குலைத்துக் கொன்ற கொடியனான இராமன் மனைவியைக் கொல்லாததோடு, யாதொரு தீங்கும் செய்யாது, ‘வெட்சி நிரை கவர்தல்’ என்னும் தமிழர் போர் முறைப்படி எடுத்து வந்து பாதுகாப்பில் வைத்து, அவளுக்கு வேண்டியவளான திரிசடையைத் துணையாக வைத்துப் போற்றி வந்த இராவணன் செயல் அறக்கொடுஞ் செயல்! இந்நற்செயலைச் செய்த இராவணன் அறக் கொடியோன்! இதுதான் கம்பருடைய கவிச் சித்திரம் போலும்! | |
|
|