பக்கம் எண் :


62புலவர் குழந்தை

   
     சேர்ந்த இவர் (பிஸ்ரீ), ஆரியர் குலப்பகைவனான இராவணனைச் சைத்தானுக்கு
ஒப்பிடுமளவுக்கு இராவணன் மீது வெறுப்புக் கொண்டதன் காரணம் நமக்கு
விளங்கவில்லை.

     இனி, ‘இராமனுக்கும் இராவணனுக்கும் ஒரே ஒரு அடிப்படையான வித்தியாசம்,
இராமனுடைய வீரம் அறம் வளர்க்கும் வீரம்; இராவணனுடைய வீரம் மறம் வளர்க்கும்
வீரம்’ என்பது. ஆம், கம்பர் கொள்கைப்படியே - கூற்றுப்படியே - தனக்கு யாதொரு
தீங்குஞ் செய்யாத ஒரு தமிழ் மூதாட்டியைத் துடிக்கத் துடிக்க வன்கொலை செய்வதும்,
வழியில் தென்படும் தமி்ழர்களையெல்லாம் வம்பில் கொல்வதும், எதிர்ப்படும்
பெண்களையெல்லம் மூக்கு முலையறுத்துக் கொல்வதும், தன்மீது காதல்கொண்ட ஓர்
அரசகுடும்பப் பெண்ணை அவ்வாறே வன்கொலை செய்வதும், தனக்கு என்றும்
எத்தகைய தீங்கும் செய்யாதவனும், பகையில்லாதவனும், தன்னுடன் எதிர்பொர
வாராதவனுமான வீர வாலியை, மற்றொருவனோடு பொருது கொண்டிருக்கும்போது
மறைந்து நின்று அம்பெய்து கொல்வதும், இலங்கை செல்லும் வழியில் கடற்கரையில்
வாழ்ந்துவந்த யாதொரு குற்றமும் செய்யாத தமிழ்க்குடி மக்களை ஒருசேரக் கொல்வதும்,
இலக்குவனோடு எதிர்த்துப் பொருதுகொண்டிருந்தபோது குறுக்கே வந்து இராவணன்
உயி்ரைக் குடிப்பதும், இன்னோரன்ன இராமன் செயல்கள் எல்லாம் அறம் வளர்க்கும
வீரச் செயல்கள்தாம்! நாம் முன்னர் எடுத்துக்காட்டிய இராவணன் செயல்களெல்லாம்
மறம் வளர்க்கும் - பாவத்தை வளர்க்கும் - வீரச் செயல்கள்தாம்! படிப்போரே தீர்ப்புக்
கூறிக்கொள்ளட்டும்.

     ராக்ஷஸ ராஐ்யத்தைக் கம்பன் எதற்காக அப்படி வர்ணித்தான்? தன்
கவித்திறத்தினைக் காட்ட; வலிபொருந்திய அவ்விலங்கையும் இராமபிரானால் அழிக்கப்
பட்டது என இராமன் பெருமையை மிகுதிப்படுத்திக் காட்டவுமேயல்லாமல், கண்டனக்
காரர் நினைக்கின்ற நினைப்புப்படி கம்பன் இராவண பக்தன் அல்லன்; இராம
பக்தனேயாவன். கம்பரைவிட உண்மையான, முதல் தரமான இராவணத் துரோகி
அன்றுமில்லை, இன்றுமில்லை, இனி யென்றும் இருக்கப் போவதுமில்லை. மேலும், ஒரு
நாட்டைப் பற்றி வர்ணிப்பவன் அந்நாட்டு மன்னனுக்குப் பக்தனாகப் போவதுமில்லை.
பகைவன் நாட்டின் இயல்பைக் கூறுதல் கவிக்கு இயல்பேயாகும்.

     கவந்தன், விராதன், கும்பகர்ணன் முதலியோரைப் பற்றிக் கம்பர்
புனைந்துரைத்துள்ளதைக் கூறப்புகின் அஃதொரு தனிக் காவியமாகும். என்னே கம்பன்
இழிப்புப் புனைந்துரை!