இனி, கவிநலங்கனிந்த, கற்பனை வளம்நிறைந்த, காமச்சுவை மிக்க கலைக்களஞ்சியமான பல்லாயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணமிருக்க, அதில் இராவணன் பெருமை நலம்படக் கூறியிருக்க, இராவண காவியம் எதற்கு? எனின், அது தான் நண்பர் பி. ஸ்ரீ போன்றவர்கள் இராவண காவியத்தை வெறுப்பதும், அவர்கள் விருப்பத்தின்படி ஆள்வோர் அதைப்பறிமுதல் செய்ததும், தமிழ்மக்கள் படிக்கக் கூடாதெனத் தடைவிதித்ததும் ஆகும். வான்மீகியார் ஒரு சாதாரண அரசகுமரனாகக் கூறியுள்ள இராமனைக் கம்பர் திருமாலின் திருவிறக்கம் ஆக்கினதும், எவளோ ஒருத்தி பெற்று எறிந்துவிட்டுச் செல்ல, சனகனால் கண்டெடுத்து வளர்க்கப்பட்ட சீதையைத் திருமகளின் திருவிறக்கம் ஆக்கினதும், தமிழர் மாபெருந் தலைவனான இராவணனை அரக்கர் தலைவன் ஆக்கினதும், மானமிக்க மறத்தமிழர்களை வானரங்கள் - குரங்குகள் - ஆக்கினதும், தம் இனத்தைக் காட்டிக் கொடுத்த மானங்கெட்ட தமிழர்களை - ஆரிய அடிதாங்கிகளை ஆழ்வார்ப்பட்டம் சூட்டிப் பெருமைப்படுத்தினதும் ஆன இன்னோரன்ன போலிப் பொய்க்கூற்றுகளைப் போக்குதற்காகவே இராவண காவியம் செய்யப்பட்டதாகும். வான்மீகி காலத்து இலங்கையிலிருந்த அரக்கர்களும் கிட்கிந்தையிலிருந்த வாலி முதலியோர் போன்ற அத்தகைய குரங்குகளும் கம்பர் காலத்தில் இருந்ததாக வரலாறில்லை. வான்மீகி வேண்டுமென்றே தமிழரில் ஒரு சாராரை அரக்கர்களெனவும், ஒரு சாராரைக் குரங்குகளெனவும் இழித்துக் கூறினர். தமிழினம் தோன்றிய நாட்டொட்டு இலங்கை தமிழர் வாழ்வகமாகவே இருந்து வந்திருக்கிறது. அவ்வரக்கர் இடைக்காலத்தே தோன்றி இராவணன் காலத்தோடு அடியோடு அழிந்தொழிந்தனர் போலும்! தமிழர் பகைவராகிய வான்மீகி அங்ஙனம் இழித்துரைக்கினும், உண்மையுணர்ந்த தமிழ் மகனாகிய கம்பர் தம் முன்னோரை அங்ஙனமே அரக்கர் எனவும், குரங்குகளெனவும் இழித்துரைத்த கயமைத்தனத்தைத் தமிழ்மக்கள் உணரவே இராவண காவியம் செய்யப்பட்டதாகும். கம்பராமாயணத்தை உண்மையென நம்பி, கம்பர் கவிச் சுவையில் ஆழ்ந்து, இராவணன் முதலிய தமிழர் தலைவர்களை அரக்கர் எனவும், தமிழர்களாகிய தங்களுக்கும் அவர்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை யெனவுங் கொண்டு, இராவணன் முதலியோர் தங்களுக்கு ஏதோ செய்யத்தகாத தீங்கு செய்தனர் போலவும், தங்களுடைய தீராக் குலப்பகைவர் போலவும் எண்ணி, | |
|
|