மனத்தை மாற்றி யனுப்பும் ஆற்றலில்லாது, தம்பியைக் கொண்டு உருக்குலைத்துக் கொன்ற இராமனை நல்லவனென்றும், தனித்துலவிய இராமன் மீது காதல் கொண்ட கொடிய அரக்கி எனக் கொண்டு, அக்காம வல்லியைத் தங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்திக் கண்டபடி இழித்தும் பழி்த்தும் கூறிவரும் தமிழ் மக்களின் அறியாமையைப் போக்கி, ஒரு பெண்ணின் மனத்தை மாற்ற முடியாதவன் எங்ஙனம் கடவுளாக முடியும்? அவள் மனத்தை மாற்ற முடியவில்லை யெனில், மறுத்துவிட்டுச் சென்று விடலாமல்லவா? ஓடோடவா துரத்துவான்; ஆண்மகன் ஒருவன் மீது ஒரு பெண்மகள் காதல் கொள்வது மூக்கு முலையறுக்கக் கூடிய அவ்வளவு பெரிய குற்றமா? என்னும் ஆராய்ச்சி யறிவைத் தமிழ்மக்கட் குண்டாக்கி, காமவல்லியை உருக்குலைத்துக் கொன்ற இராமன் செயல் கொடிதினும் கொடிய அறக் கொடுஞ் செயல் என நல்ல தீர்ப்புக் கூறவே யாகும். தன்னாட்டுட் புகுந்து குடிமக்களின் ஆடுமாடுகளைத் திருடிக் கொலைவேள்வி செய்துண்டு வந்த ஆரியமுனிவர் செயலைக் கண்டித்து வேள்வி செய்யாமல் தடுத்து வந்த தாடகை என்னும் தமிழ்மூதரசியைப் பெண்ணென்றும் முதியாளென்றும் பாராமல், கோசிகன் என்னும் ஆரிய முனிவன் சொற்படி கொன்ற இராமன் கொடுஞ் செயலைப் போற்றியும், கொலை வேள்வியை மறுத்து வந்த தாடகையின் நற்செயலைத் தூற்றியும், அவ்வரக்கியைக் கொன்றது சரியே. முனிவர்கள் செய்து வந்த முதுமறை வேள்வியை அழித்து வந்த கொடியாள் ஒழிந்தாள். ஒரே அம்பில் இராமச் சந்திரன் அவ்வரக்கியைக் கொன்று அறத்தை நிலை நாட்டினான் என்னும் வெற்றுரையை அப்படியே மெய்யென நம்பி, இராமனைப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மூதாட்டியைத் தூற்றித் திரியும் தமிழர்களின் மயக்கவுணர்வினைப் போக்கி, உண்மையை உணரும்படி செய்யவே யாகும். தாடகை அரக்கியல்லள்; விந்தச்சாரலில் அமைந்திருந்த ஒரு நாட்டை ஆண்டு வந்த தமிழரசி; ஆண் மக்கள் கண்டு வெள்கும் படி செங்கோல் செலுத்திய செவ்வியள்; ஒழுக்கமே உருவானவள்; கொலை மறுத்த குணப் பெருங்குன்றம். அத்தமிழரசி செய்த பெருங்குற்றம் - கொலைத் தண்டனைக் குரிய அத்தகு குற்றம் கொலை வேள்வியை மறுத்ததேயாகும். அயல் நாடர்களாகிய ஆரியர்கள் அவ்வரசியின் உடன்பாடின்றி அவள் ஆட்சிக்குட் பட்ட தமிழ் நாட்டுக்குள் வந்ததே குற்றமாயிருக்க, அந்நாட்டரசி சொல்லையுந் தட்டிக் கொலைவேள்வி செய்ததை மறுத்த, தடுத்த அரசியைக் கொன்றது கொடுமையினுங் கொடுமை! பெண் | |
|
|