கூறாகப் பிரித்துப் பேசுவது அழகல்லழு என்று பேசியும் எழுதியும் வரும் தமிழ்நாட்டுப் பார்ப்பன மக்கள், தமிழ்நாட்டிற் பிறந்து, தமிழையே தம் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் படித்து, தமிழினாலேயே வாழ்ந்து வரினும், தமிழர் பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும், பழக்க வழக்கத்திற்கும், தமிழ் மரபுக்கும் மாறுபாடாக வாழ்ந்து வருவதையும், தமிழினும் வடமொழியை உயர்வுடையதாகக் கருதியும் பேசியும் எழுதியும் வருவதையும், வடமொழியை அளவுக்கு மீறிக் கலந்து தமிழின் தனித்தன்மையைக் கெடுப்பதோடு, தனிமரபாகப் பேசியும் எழுதியும் வருவதையும் தமிழ்மக்கள் உணர்ந்து கொள்வதற்காகவே இராவண காவியம் செய்யப்பட்டது. கம்பராமாயணத்தால், தமிழ்மக்கட்கு ஏற்பட்ட ஆரிய மோகத்தால் ஆரியமொழி தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுத் தமிழ்மொழி சீர்குலைந்துவிட்டது. ஆரிய மயக்க மருந்துண்டு மயங்கிய தமிழ்மக்கள், ஆரியமொழிக் கலப்பால் தமிழ்மொழி வளரும் என்னும் பொய்யுரையை மெய்யென நம்பி, அளவு கடந்து ஆரியச் சொற்களைச் கலந்து தனித்தமிழ்த் தன்மையைக் கெடுத்துவிட்டனர். ஆரியக் கலப்பினாலேயே தமிழ் திரிந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வேறு மொழிகள் தோன்றின. அம்மொழிகள் பேசுவோர் தாங்கள் பழந்தமிழர் வழி வந்தவர் - தமிழர் என்பதை அறியாது, வேறு இன மக்களெனத் தங்களை எண்ணித் தமிழர்களைப் புறக்கணித்து வருவாராயினர். தமிழ் மக்களும் அன்னாரை அங்ஙனமே எண்ணலாயினர். இக்குறைபாடுகளையெல்லாம் போக்கிப் பழையபடி தனித்தமிழாக்கங் காணவும், தமிழ் மக்கட்குத் தமிழ்ப்பற்றை யுண்டாக்கவும், திராவிடத் தமிழ்நாடு காணவும், தமிழன் ஆரியச் சார்பற்று வாழவுமே இராவண காவியஞ் செய்யப்பட்டது. தமிழர் பண்பாடு, நாகரிகம், மணமுறை, வாழ்க்கைமுறை, ஆட்சிமுறை, வீரம், கொடை, நடை, மேம்பாடு, ஒருமை வாழ்வு, ஒழுக்கமுறை, பழந்தமிழ் நாட்டின் வரலாறு, தமிழர் தந் தாய்மொழி யாந் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்துவந்த வரலாறு, தமிழ் வரலாறு, தமிழ்மக்கள் உலக முதன் மக்களாய், உலக மக்களுக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த நிலை, ஆரியர் வருகை, ஆரிய நாகரிகம், ஆரியக் கொள்கை, ஆரியச் சூழ்ச்சி இன்ன பல பழந்தமிழ் வரலாறுகளையெல்லாம் இன்றைய தமிழ் மக்கள் அறிந்து, இன்றுள்ள தந்நிலைக்கிரங்கித் தமிழினவுணர்ச்சியுற்று ஒன்றுபட்டு வாழ்தற் பொருட்டு வீறிட்டெழவே இராவண காவியஞ் செய்யப்பட்டது. | |
|
|