கம்பன் கவிநயத்தில், கற்பனைத் திறத்தில், கலைச் சிறப்பில், காவியச் சுவையில் கட்டுண்டு, ஆரியச் சேற்றில் அழுந்திக்கிடக்கும் தமிழ் ரசிக மணிகளைத் தட்டி யெழுப்பித் தனித் தமிழுலகில் உலவச் செய்து, பழந்தமிழகத்தின் இயற்கை வளத்தினை, இன்பவாழ்வினை, இயல் நெறி முறையினை இனிது கண்டு களிக்கும்படி செய்யவே இராவண காவியம் செய்யப்பட்டது. ஆரிய வால்மீகியாலும், ஆரிய அடிமையான தமிழ்க் கம்பராலும் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட பொய்க் கூற்றுக்களை அகற்றவும், இயற்கைக்கு ஒவ்வாப் புனைந்துரைகளைப் போக்கவும், இராமாயணத்தின் உண்மை வரலாற்றைத் தமிழ்மக்கள் உணர்ந்து கொள்வதற்காகவுமே இராவண காவியம் செய்யப்பட்டது. தமிழகத்தே ஆரியச் சார்பினரான போலிச் சோழர் ஆட்சிக் காலத்தே (கி.பி. 13ஆம் நூற்) ஆரிய மேம்பாட்டுக்காகத் தமிழரைத் தாழ்த்திக் கம்பராமாயணம் செய்யப்பட்டது. 1946 இல் தமிழரின் அவ் விழிவைப் போக்க இராவண காவியம் செய்யப்பட்டது. தமிழகத்தை ஆளும் வடவராதிக்கத்தின்கீழ் இயன்ற ஒரு கட்சியாட்சியினரால், தமிழ்மக்கள் படிக்கக் கூடாதெனப் படித்தால் ஆரிய ஆதிக்கம் ஆட்டங்கண்டு விடுமென - 1948இல் இராவண காவியம் தடைசெய்யப்பட்டது. இவ்வாட்சி யொழிந்து, தமிழகத்தில் தனித் தமிழராட்சி ஏற்படின், இராவண காவியத் தடை நீக்கப்பட்டுத் தமிழ்மக்கள் படிக்க முற்படின், ழுகம்பராமாயணம் இருக்க இராவண காவியம் எதற்கு?ழு என்பது, அப்போது விளங்கும். குறிப்பு: இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் (1948இல்) மேலே குறிப்பிட்டுள்ளபடியே, 1967இல் தமிழகத்தில் தனித் தமிழராட்சி ஏற்பட்டு, 17-5-71இல் தடை நீக்கப்பட்டு, 23 ஆண்டு கட்குப் பின்னர் இராவண காவியம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. இருபத்து மூன்று ஆண்டுகளாக, எப்போது காவியத் தடை நீங்கும், எப்போது நாம் படித்து இன்புறுவோம்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் படித்துப் பயனடைந்து, ழுகம்பராமாயணம் இருக்க இராவண காவியம் எதற்கு?ழு என்பதை விளக்குவார்களாக. | |
|
|