புலவர் குழந்தை | வாழ்க்கை வரலாறு | இராவண காவியம் என்னும் ஒப்பிலாத தனித் தமிழ்ப் பெருங் காவியத்தை இயற்றித் தமிழ் மக்களிடையே புத்துணர்ச்சியினையும், இனவெழுச்சியினையும், தன்மானப் பண்பினையும் கிளர்ந்தெழச் செய்த புலவர் குழந்தை அவர்களின் சொந்த ஊர், கொங்குநாட்டுக் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓலவலசு என்னும் சிற்றூராகும். இவ்வூர் கோவை மாவட்டத்து, ஈரோடு வட்டத்தில், ஈரோடு - பழைய கோட்டை வழியில், ஈரோட்டிற்குத் தெற்கே பதினாறாவது கல்லில் (26 கி.மீ) உள்ளது. ‘ஓலவலசுப் பண்ணையக்காரர்’ என்னும் பழம் பெருங்குடியில், 1-7-1906இல் இவர் பிறந்தார். இவர்தம் தந்தையார் - முத்துச்சாமிக்கவுண்டர்; தாயார் - சின்னம்மையார். இவர் தம் பெற்றோர்க்கு ஒரே மைந்தராவர். நான்கைந்து திண்ணைப் பள்ளியில் நான்கைந்தாண்டுகள் இடையிடையே விட்டுவிட்டுப் படித்த இவர்தம் பள்ளிப் படிப்புக் காலம் ஆகக்கூடி எட்டு மாதங்களேயாம். இவர் பத்தாண்டுப் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலை இயற்கையாகப் பெற்றிருந்தார். அவ்விளம் பருவத்திலேயே, ஒரு பாட்டைப் பிறர் பாடக் கேட்டால் உடனே இவர் அப் பாட்டின் ஓசையில் புதுப் பாட்டொன்றினைப் பாடிவிடுவர். எந்நேரமும் ஏதேனும் ஒரு பாட்டை எழுதிக்கொண்டிருப்பதே இவருடைய பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் இருந்தது. இவர் முதன் முதலாகப் பாடியவை இசைப்பாடல்களேயாம். இவர்தம் கல்லாக் கவித்திறத்தினையும், கவிகளின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர் பெருமக்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டி இவரை ஊக்குவித்தனர். அக்காலத்தில் ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர் எவருமின்மையால், இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே முயன்று படித்துத் தமிழில் சிறந்த புலமையுடையவரானார். மேலும், தாமாகவே படித்து, 1934ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் பட்டம் பெற்றுச் சிறந்தார். | |
|
|