இவர் 1924 முதல் 1962 முடிய 39 ஆண்டுக் காலம் ஆசிரியத் தொண்டாற்றியுள்ளார். 1941 முதல் 1962 முடிய, பவானி கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஓலவலசில் இவருக்கு முன் படித்தவர் எவருமில்லை. அவ்வூரார் எவருக்கும் கையொப்பமிடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் பேரார்வங் கொண்டிருந்த இவர், தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்தபொழுது, தம் ஊரிலிருந்த தம்மை யொத்த இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்து, அவர்களைக் கொண்டு வயதாற் பெரியவர்களுக்குக் கையெழுத்துப் போடப் பழக்கி, அதன்மூலம் அவ்வூரின் தற்குறித்தனத்தைப் போக்கினார். அதுபோழ்து, இவரைவிட இரண்டு மூன்ற மடங்கு வயதில் மூத்த பலர் இவரிடம் கல்வி கற்றுக்கொண்டனர். யாப்பிலக்கணம் படிக்கத் தொடங்கு முன்னரே 1918இல் இவர் பாடிய ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் சிறு நூல் அச்சாகியுள்ளது. இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல. அவற்றுள் ‘ஆடிவேட்டை’, ‘நல்லதம்பிச் சர்க்கரை தாலாட்டு’ என்பன, அறிஞர்களால் பாராட்டப் பெற்றவை. 1926-27இல், வெள்ளகோவில், ‘வீரக்குமாரசாமி இரதோற்சவச்சிந்து’ ‘வீரக்குமாரசாமி காவடிச்சிந்து’ ‘வெள்ள கோவில் வழி நடைச்சிந்து’ ஆகிய நூல்கள் அச்சாயின. யாப்பிலக்கணம் அறியா முன்னர் இவர் பாடிய அப் பாடல்கள் யாப்பமைதி யுடையனவாய் உள்ளன. | | காட்டு: செங்கரும்பை வாங்கித் திருக்கையிலே தாங்கி அங்கசவே ளோட அவன் செயலைப் பாட மங்கையர்கள் கூடி மணாளருட னாடித் தெங்கிள நீ ருண்பாரடி என் தங்கமே தெருவில் திரிவாரடி. - கன்னியம்மன் சிந்து | இவர் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்று கொண்டிருந்த போழ்தும் பாக்கள் இயற்றுவதைக் கைவிடவில்லை. அதனையும் ஒருங்கு செய்தே வந்தார். அதாவது, படிக்கும் செய்யுட்களைப் போன்ற புதுச் செய்யுட்கள் செய்துவருவார். | |
|
|