‘இந்நூலாசிரியரான புலவர் குழந்தை ஒரு சுயமரியாதைக்காரர்’ என்று குறித்திருப்பதே இவரது சுயமரியாதைத் தொண்டுக்குத் தக்க சான்றாகும். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் எனலாம். இவர் சமய நம்பிக்கை இல்லாதவர், வெள்ளக் கோவில் தீத்தாம்பாளையத்தில், 1930இல், ழுஞான சூரியன்ழு ஆசிரியரான சாமி சிவானந்த சரசுவதி என்பாருடன், ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் இவர் வாகை சூடினர். 1938இலும், 1948இலும் நடைபெற்ற இந்தி யெதிர்ப்புப் போராட்டங்களில் பங்குகொண்டு, பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும் பெருந்தொண்டாற்றினார். இந்தி ஆட்சி மொழியானால் தமிழுக்கும் தமிழர்க்கும் உண்டாகும் கேட்டினை விளக்கி, ‘இந்தி ஆட்சி மொழி ஆனால்’ என்னும் ஆராய்ச்சி நூலினை எழுதி அச்சிட்டு, 1965இல் கோவையில் நடந்த காங்கிரசு மாநாட்டில் வழங்கினார். ‘அரசியலரங்கம்’ என்னும் நூலில், ‘ஆட்சி மொழி’ என்னும் தலைப்பில், இந்தி தேவையில்லை என்பதை முடிவுகட்டியுள்ளார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற இயக்கத்தின்போது, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அச்சுக்கட்டைக்கள் செய்து கொடுத்து, ஒரு துணி வணிகரைக் கொண்டு வேட்டி, துண்டு, சேலைக் கரைகளில் அச்சிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமை இவரையே சாரும். வேளாள இனத்தினரிடையேயுள்ள பல பிரிவினரையும் ஒன்று சேர்க்கும் பொருட்டும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் பொருட்டும், 1946 முதல் 1950 வரை, ழுவேளாளன்ழு என்னும் மாத இதழை நடத்தினார். விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்த மணம் முதலியன செய்யும் அளவுக்கு அவ்வினத்தினரிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது ‘வேளாளன்’. ‘வேளாளனில்’ தொடர்ந்து இவரெழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களைப் புத்துணர்ச்சி பெறுமாறு செய்தது. வேளாள சமூகத் தலைவரான திரு.வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் தலைமையில், தருமபுரி மாவட்டம் அரூரில் நடந்த வேளாள மாநாட்டில், விதவை மணத் தீர்மானங் கொண்டு வந்து ஒருமனமாக நிறைவேற்றி, அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்கள் செய்துவைத்தமை இவர் சமூகத் தொண்டுக்குச் சிறந்த சான்றாகும். | |
|
|